வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் வடமாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை தீவிரமாக நடந்தி வருகின்றனர்.
100 நாட்களை கடந்த விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 130 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த டிசம்பர் 8-ம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பெரும் வன்முறை ஏற்பட்டது.
இன்று பாரத் பந்த்
இதை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக் கையில், "வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு நாட்டு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாரத் பந்த் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் . முக்கியமாக ஹரியானா, பஞ்சாப்பில் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. அங்கு பல இடங்களில் ரயில்கள் மற்றும் பேருந்துகள் மறிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், தேசியவாத காங் கிரஸ் உட்பட 24 எதிர்க்கட்சிகள் முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக வரும் 28-ம் தேதி வேளாண் சட்டங்களின் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்திதல் முழு அடைப்பு
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் தொ.மு.ச. உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு அளிக்கப்படுகின்றன என்றும், அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளனர்.
அதேவேளை இன்று பகலில் ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுவதாக ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
முழு அடைப்பு நடந்தாலும் அரசு பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் இன்று வழக்கம்போலவே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
முழு அடைப்பையொட்டி, தமிழகத்திதல் அசம்பாவிதங்களை தவிற்க தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.