கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று நாமக்கல் ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
கரும்புக்கு சொட்டு நீர் பாசனம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஆட்சியர், பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் (PMKSY) 2020-21-ம் ஆண்டிற்கான பொருள் இலக்காக 4800 ஹெக்டேர், நிதி இலக்காக ரூ.26.69 கோடி பெறப்பட்டுள்ளது. இதில் இதுவரை 5668 ஹெக்டேர் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரும்பு பயிர் பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், கரும்பு பயிருக்கு சொட்டுநீர்பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது, அதிகபட்சமாக ரூ.49,000 வரை மானியம் அதிகமாக வழங்கப்படும் என்றார்.
பயிர் இழப்பீடு
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் வரை 3,270,13 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இதில், பயிர் இழப்பீட்டுத் தொகையாக ரூ.153.72 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1.95 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உழவர் உற்பத்தியாளர் குழுக்கள்
கூட்டு சாகுபடியை விவசாயி களிடையே ஊக்குவிப்பதற்காக,கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் 40 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு வேளாண் இயந்திரக் கருவிகளை வாங்குவதற்காக, அரசு ரூ.5 லட்சம் தொகுப்பு நிதியினை வழங்கியுள்ளது. இக்குழுக்கள் அனைத்தும் தொகுப்பு நிதியினை பயன்படுத்தி தங்கள் பகுதிக்குத் தேவையான பண்ணை இயந்திரங்களை கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குளிர்பதன கிடங்குகள்
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 6 உழவர் சந்தைகளில், நாளொன்றுக்கு சராசரியாக 454 விவசாயிகள் 69 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் என ரூ.21.89 லட்சம் மதிப்புள்ள விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். நாமகிரிப்பேட்டை, பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சேமிக்க தலா 25 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள குளிர்பதன கிடங்குகள் பயன்பாட்டில் உள்ளன என ஆட்சிர் மெகராஜ் தெரிவித்தார்.
மேலும் படிக்க..
மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா நெல் ஆராய்ச்சிகளுக்கு ஒப்பந்தம்! வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்!
மேட்டூர் உபரி நீரை சரபங்கா வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் - முதல்வர் பழனிசாமி துவக்கிவைப்பு!!