தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், நான்கு நாட்கள் நடைபெறும் விழாவில் 24 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ''வேளாண்மையில் புதிய பரிணாமம்'' என்ற தலைப்பில் மாநில அளவிலான உழவர் தின விழா தொடங்கியுள்ளது. இவ்விழாவனது, செப்., 26, 27, 28 மற்றும் 29 ஆகிய நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் கண்காட்சி மற்றும் கருத்துக்காட்சி திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேளாண் உழவர் தின விழா
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் 255 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வரங்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், வேளாண் வாரியங்கள், நபார்டு வங்கி, தொண்டு நிறுவனங்கள், இடுபொருள் விற்பனையாளர்கள், தனியார் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விரிவாக்கச் சேவை நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவோர், கால்நடை, மீன்வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வேளாண் விற்பனை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் நலன் காக்கும் அரிய திட்டங்கள்!
உழவர் தின விழாவை தொடங்கி வைத்துப் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அரசும் உழவர்களை உச்சத்தில் வைத்து, வேளாண்மைக்கெனத் தனி நிதி நிலை அறிக்கையினைத் தயார் செய்து சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றார். வேளாண்மையில் தற்போதுள்ள சவால்களைச் சாதனைகளாக மாற்றி, அதன் மூலம் விவசாயிகளின் நலனைப் பேணிக் காத்திட, பல அரிய திட்டங்கள் வேளாண்மை-உழவர் நலத்துறையால் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகளிடையே அதிகரித்து வரும் வேளாண் இயந்திரத் தேவையினை நிவர்த்தி செய்து, உயர்மதிப்பு வேளாண் இயந்திரங்கள் பயன்பாட்டினை ஊக்குவிக்க, தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க விவசாயிகள், ஊரகத் தொழில்முனைவோர்கள், விவசாயச் சங்கங்கள், விவசாயக் கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது, இதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, 2024-2025 ஆம் ஆண்டில், 207 வேளாண் இயந்திர வாடகை மையங்கள், மொத்தம் 32 கோடியே 90 இலட்சம் ரூபாய் மானியத்தில் அமைக்கப்படுகிறது.
உழவர்களுக்காக 6 திட்டங்கள்
தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் உழவர்களுக்கு ஆறு திட்டங்கள் இந்த நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றார்.
- தோட்டக்கலைப் பயிர்களுக்கு வேளாண் இடுபொருட்களை துல்லியமாகத் தெளிக்கச் செய்வதற்கான ட்ரோன் தெளிக்கும் தொழில்நுட்பம்,
- தமிழகத்தில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்குதல் மற்றும் பரவலாக்குதல்.,
- தமிழக வேளாண் மண்ணில் நுண்ணுயிர் தொழில்நுட்பங்கள்
- கரிம வேளாண் உத்திகளைப் பயன்படுத்தி மண் வளத்தை மேம்படையச் செய்தல்,
- நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற, சத்துகள் செறிவூட்டப்பட்ட நெல் இரகங்களை உருவாக்குதல்,
- தோட்டக்கலை பயிர் சாகுபடியில் இயந்திரமயமாக்குதல் மற்றும் நிலசம்பங்கி, செவ்வந்தி, ரோஜாவில் புதிய இரகங்களுக்கான ஆராய்ச்சி
ஆகிய 6 திட்டங்கள் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றார் .
24 புதிய பயிர் இரகங்கள்
புதிய தொழில்நுட்பங்களை அனைத்து உழவர்களும் தெரிந்துகொள்ளவும், கடைபிடிக்கவும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது பல தரப்பட்ட ஆய்வுகள் மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டு பல தொழில்நுட்பங்களையும், புதிய பயிர் இரகங்களையும் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகின்றது. இவ்வாண்டு 24 புதிய பயிர் இரகங்கள், 7 மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் 5 பண்ணைக் கருவிகளை உருவாக்கி வெளியிட்டுள்ளோம்.
இதில் குறிப்பாக, நெல்லில் கோஆர்எச் 5 என்ற கலப்பின இரகம், கோ 58 என்ற பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன இரகம், கார் மற்றும் குறுவைகேற்ற குறைந்த வயதுடைய நெல் ஏடீடி 59 என்ற ரகம், வெள்ளை பொன்னியைப் போன்ற நடுத்தர சன்ன அரிசியை கொண்ட நெல் கேகேஎம் 1 என்ற இரகம், மக்காச்சோளத்தில் விஜிஐ எச் (எம்) என்ற இரகம், கோ (எஸ்எஸ்) 33 என்ற இனிப்புச் சோளம் இரகம், கேழ்வரகு ஏடிஎல் 2 என்ற இரகம், நிலக்கடலையில் கோ 8 என்ற இரகம், தக்கை பூண்டு டிஆர்ஒய் 1 என்ற இரகம், திராட்சை ஜிஆர்எஸ் 1 என்ற இரகம், பலா பிகேஎம் 2 என்ற இரகம், தென்னை விவிஎம் 6 என்ற இரகம், குண்டுமல்லி கோ 1 என்ற இரகம் மற்றும் பல்லாண்டு முருங்கை பிகேஎம் 3 ஆகியவைகளை குறிப்பிட தக்க இரகங்கள் ஆகும்.
ஒரு வட்டாரத்திற்கு ஒரு விஞ்ஞானி
உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மேலும் திறம்பட செயல்படவேண்டும் என்ற நோக்கத்தில் இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் தனித்தனியே ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவினை தத்தெடுத்துளள்து. மொத்தம் 112 உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு அவற்றிக்கு தேவைப்படும் தொழில்தொடங்குவதற்கான திட்டம், ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பிற சேவைகளையும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் ஆணைக்கேற்ப விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்க ஏதுவாக ஒவ்வொரு வட்டாரத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலைக்கழகம் மூலம், Agro-Met Unit (DAMU) திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான காலநிலை குறித்த ஆலோசனைகளை சமூக ஊடகங்கள் மூலம் வழங்கி வருகிறோம். இதன்மூலம் 3-4 நாட்களுக்கு முன்னதாக வேலைகளைத் தீர்மானிக்க முடியும். அதுமட்டுமின்றி கிராம அளவில் சுழல் காற்று மற்றும் தீவிர வானிலைக் காரணிகளை முன்னறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் முதன் முறையாக, டிரோன் தொழில்நுட்பம் மூலம் இடுபொருட்களை தெளிக்கும் செயல்முறைகளை, ஏழு முக்கியப் பயிர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. உழவர் பெருமக்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இடுபொருட்கள் மற்றும் விதைகளை ஆன்லைன் மூலம் வாங்குவதற்காக TNAU Agricart என்ற ஆன்லைன் இணையதளத்தை உருவாக்கி தற்பொழுது உழவர்களுக்கு வீடுகளுக்கே விதைகள் மற்றும் இடுபொருட்களை டெலிவிரி செய்து வருகிறது.
மேலும், இந்த விழாவில் உழவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு வேளாண் சாகுபடியில் புதிய உத்திகளை கண்டறிந்து அதை தாங்களின் வயல்களில் முழுமையாக கடைபிடித்து, வேளாண் உற்பத்தியை பெருக்கி தாங்களின் வேளாண் வருமானத்தை பெருக்குமாறு இத்தருணத்தில் அனைவரும் கேட்டுக்கொள்கிறேன் என்றும், இந்த விழாவை சிறப்பாக நடைபெறவதற்கு வித்தி இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், விஞ்ஞானிகள் மற்றும் அனைத்து பண்ணை அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாரட்டுகளையும் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Read More...
உள்ளூா் பாரம்பரியப் பயிா் உற்பத்தி அதிகரிப்பு அவசியம்! - பயிர் பாதுகாப்புதுறை வலியுறுத்தல்!