கலப்பட கருப்பட்டி தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில், உடன்குடி பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 2020 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் (Sendhil Raj) மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது மாதமாக காணொலி காட்சி வாயிலாக விவசாயிகள் குறைதீர் கூட்டம் (Farmers' grievance meeting) நடைபெறுகிறது. கடந்த கூட்டத்தில் விவசாயிகள் 54 கோரிக்கைகளை தெரிவித்தனர். அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளனமாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காலத்தில் வருவாய், வேளாண்மை மற்றும் புள்ளியியல் துறையினர் மிக சிறப்பாக பணியாற்றினர். குறிப்பாக விவசாயிகள் அனைவரையும் பயிர் காப்பீடு (insurance) செய்ய வைப்பதில் சிறப்பாக பணி செய்தனர். அதன் மூலம் 92 சதவீத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
கலப்பட கருப்பட்டி:
உடன்குடி வட்டார வேளாண்மை அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பேசிய விவசாயி சந்திரசேகரன், கலப்பட கருப்பட்டி (Jaggery powder) விற்பனையை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதேபோல் உடன்குடியை சேர்ந்த திருநாகரன் என்ற விவசாயி மற்றும் ஒரு வழக்கறிஞரும் இதே கருத்தை வலியுறுத்தினர். உலகளவில் புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டி தற்போது கலப்படத்தால் சீரழித்து கிடக்கிறது. கலப்பட கருப்பட்டியால் உடன்குடியின் பெயருக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கலப்பட கருப்பட்டியால் உடல்நலத்துக்கும் கேடு ஏற்படுகிறது. எனவே, கலப்பட கருப்பட்டி விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர் அவர்கள். ஆட்சியர் செந்தில் ராஜ், இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் கலந்து பேசி விரைவில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாயம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர். இவைகளுக்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், கோட்டாட்சியர்கள் தனப்பிரியா, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
காளான் உற்பத்தியில் வெற்றி கண்ட சரவணன்! இளைஞர்களுக்கும் வழிகாட்டுகிறார்
தென்னை நார் தொழிலில் வருமான வாய்ப்பு! மதிப்புக் கூட்டினால் நல்ல இலாபம்!
6 தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் குடும்பம்! பாரம்பரியத்தை விரும்பும் பட்டதாரி!