ஆசியாவின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையான நாசிக்கில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.1 க்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதே சமயம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.250-க்கு வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக வெங்காயத்தின் விலை இந்தியாவில் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக்கில் விவசாயிகள் அறுவடை செய்த வெங்காயத்தை கிலோவுக்கு ₹1 வரை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிர்ச்சியூட்டும் வகையில் வெங்காயத்தில் விலை குறைந்ததால், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த வெங்காயங்களை சாலையில் கொட்டும் துயர சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. வெங்காய விலை வீழ்ச்சியினை சரி செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாயி தனது 512 கிலோ வெங்காயத்தை கிலோ ஒன்றுக்கு ₹1 என்ற விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாசிக்கின் லசல்காவ் ஏ.பி.எம்.சி மார்க்கெட்டில் சில தினங்களுக்கு முன் வெங்காயம் ஏலம் தொடங்கியது. அப்போது வெங்காயம் கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை ஏலம் போனது. வெங்காயம் அடிமாட்டு விலைக்கு ஏலைக்கு போனதை அடுத்து விரக்தியடைந்த விவசாயிகள் மஹாராஷ்டிரா மாநில வெங்காய உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தலைமையில் ஏலத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், நாளுக்கு நாள் வெங்காயத்தினை பயிரிட்ட விவசாயிகள் விலை வீழ்ச்சியினால் வேதனையடைந்து வருகிறோம். ஒன்றிய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்றனர். குறைந்தப்பட்சம் ஒரு கிலோ வெங்காயத்தினை ரூ.15-20 வரையிலாவது கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் என தெரிவித்தனர்.
இந்தியாவில் வெங்காயத்தின் நிலை இப்படி என்றால் அண்டை நாடான பாகிஸ்தானில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தினால் பாகிஸ்தானில் வெங்காயத்தின் விலை 350 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் 41.54 சதவீதமாக அதிகரித்தது. வெங்காயம் மட்டுமின்றி எரிபொருள், உணவு, மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.272 ஆக விற்பனை ஆகும் நிலையில், ஒரு கிலோ வெங்காயம் சராசரியாக ரூ.250 க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் கடந்த 15 நாட்களாக வெப்பநிலை உயர்ந்து வருவதே வெங்காயத்தின் விலை சரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். விவசாயிகள் ஆண்டு முழுவதும் மூன்று அறுவடை சுழற்சியில் வெங்காயத்தை பயிரிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டது- ஜி20 மாநாட்டில் மோடி உரை
விதிகளை மீறி மருத்துவ கழிவுகளை அகற்றினால் நடவடிக்கை- TNPCB எச்சரிக்கை