டிராக்டர் மானியம் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், பாரபட்சம் காரணமாக திருப்பூர் மாவட்டம் மானியம் வழங்கப்படுவதிலிருந்து புறக்கணிக்கப்படுவதாக விவசாயிகள் கூட்டாக சேர்ந்து முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
இயந்திர மயமாக்கல் திட்டம்
மத்திய - மாநில அரசுகளால், வேளாண் இயந்திர மயமாக்கல் மானிய திட்டம் திட்டத்தின் கீழ் வேளாண் சாகுபடியில், பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அரசு இணையதளத்திலும், வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களிலும், மானியத்துக்கான விண்ணப்பங்களை விவசாயிகள் சமர்ப்பிக்கின்றனர். முன்னுரிமை அடிப்படையில், மானியம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் புறக்கணிப்பு
டிராக்டர் மானியத்துக்கான பயனாளிகள் தேர்வில், திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாகவது, வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு, திருப்பூர் மாவட்டத்துக்கு, குறைந்தளவே மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, மானியத்தில், டிராக்டர் பெற, 700 பேர் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ஆனால், மாவட்டத்துக்கு, 75,65,000 ரூபாய் என, 21 பயனாளிகளுக்கு மட்டுமே, மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 698 விண்ணப்பங்கள் மட்டும் சமர்ப்பிக்கப்பட்ட, ஈரோடு மாவட்டத்தில், 106 நபர்களுக்கு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
இயந்திர மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தும் வேளாண் பொறியியல் துறையின், தலைமை பொறியாளர் தனது சொந்த மாவட்டத்துக்கு, பாரபட்சமாக ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிய வருகிறது. கடந்தாண்டும் இதே நிலைதான் இருந்தது. மத்திய, மாநில அரசு ஒதுக்கீடு செய்யும், மானியத்தை ஒரு தலைபட்சமாகவும், முறைகேடுகள் நடைபெறும் வகையில், அதிகாரிகள் செயல்பாடு உள்ளது. எனவே, காத்திருப்போர் பட்டியலின் முன்னுரிமை அடிப்படையில், திட்ட ஒதுக்கீடு செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
பயிர் காப்பீடு இழப்பீடுக்கான ஆய்வு பணி தொடக்கம் - மார்ச் மாதம் இழப்பீடு கிடைக்க ஏற்பாடு?
வேளாண் பல்கலைக்கழத்தில் 21 காலிப் பணியிடங்கள்! - உடனே விண்ணப்பிக்க... முழு விபரம் உள்ளே!
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!