கடலுார் மாவட்டத்தில், விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட உழவர் சந்தைகளை மீண்டும் முழுவீச்சில் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், வடலுார், விருத்தாசலம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தைகள் இயங்கின. விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறி, பழங்கள் நேரடியாக கிடைத்ததால் பொதுமக்களும் பெரிதும் பயனடைந்தனர். மாவட்டத்தில் உழவர் சந்தைகள் துவக்கப்பட்ட போது, விவசாயிகள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. பின், உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் குறைந்தது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக முற்றிலும் செயல்பாடு குறைந்து, நுகர்வோர் வருகையும் குறைந்தது.
உழவர் சந்தை (Farmer Market)
கடலுார் உழவர் சந்தை மட்டுமே ஓரளவு செயல் பாட்டில் உள்ளது. சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி உழவர் சந்தைகள் பெயரளவிற்கு செயல்பாடு உள்ளது. உழவர் சந்தைகளில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து, மீண்டும் இலவச போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்தால் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காக தமிழகத்தில் 50 உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 12.50 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இதற்காக மாவட்டந் தோறும் உழவர் சந்தைகளை ஆய்வு செய்து, செயல்பாடு மற்றும் தேவையான அடிப்படை வசதிகள், விவசாயிகளின் பிரச்னைகளை கண்டறிய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உழவர் சந்தை இயங்கும் இடத்தை தெரிவிக்க பெயர் பலகைகள் வைப்பது, காய்கறி கழிவுகளை அகற்றி துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
உழவர் சந்தைக்குள் போதிய கடைகளை அமைத்து தருவது, வெளியில் இயங்கும் கடைகளை தடுக்க வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் அதிகளவில் உழவர் சந்தையை பயன்படுத்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விளம்பரப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. கடலுார் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளை, தமிழக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குனர் நடராஜன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு (Inspection)
கடலுார் உழவர் சந்தையில் குவிந்திருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். போதிய இடவசதியின்றி தரையில் அமர்ந்தும், உழவர் சந்தைக்கு வெளியில் சாலையோரம் விற்பனை செய்தவர்களுக்கு புதிய கடை கட்டித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடலுார் உழவர் சந்தையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், உழவர் சந்தையின் துாய்மைப் பணி போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவசாயிகள், பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
பின், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலுார் உழவர் சந்தைகளை ஆய்வு மேற்கொண்டார். பண்ருட்டியில் மாற்று இடத்தில் உழவர் சந்தை அமைக்க ஆலோசனை நடத்தினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் உழவர் சந்தைகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உபயோகத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. சிறப்பான உழவர் சந்தைகள் விரைவில் காணலாம் என, தெரிவித்தார்.
மேலும் படிக்க
குப்பையில் இருந்து பசுமை உரம்: குறைந்த விலையில் விற்பனை செய்யத் திட்டம்!