சமீபத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஸ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைப்பெறுவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையேற்று விவசாயிகளிடம் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் பேசுகையில், மார்ச் 1 முதல் மோவோகுரோட்டோபாஸ், ப்ரோபெனோபோஸ், அசிபேட், குளோரிபைரிபாஸ், ப்ரோபெனோபோஸ்- சைபர்மெத்ரின், குளோரிபைரிபாஸ் - சைபர்மெத்ரின் ஆகிய ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ, 60 நாட்களுக்கு தமிழக அரசு தற்காலிகமாக தடை வி்தித்துள்ளது. இவற்றுடன் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள ரடோல்பேஸ்ட் பூச்சிக்கொல்லி மருந்துக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை மீறி தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேற்குறிப்பிட்ட பூச்சி கொல்லி மருந்துகள் மண் மற்றும் சுற்றுச்சூழலுக்குகேடு விளைவிப்பதால் தான் அரசு தடை விதித்துள்ளது எனவும், இவற்றினை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் ஆட்சியர் வலியுறுத்தினார்.
விவசாய பயிர்களை தாக்கும் எலிகளை கொல்ல பயன்படுத்தப்படும் ரடோல் பேஸ்ட், தனிநபர் மேற்கொள்ளும் தற்கொலைகளுக்கு அதிகளவிலான காரணமாக இருந்துள்ளது. இந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பாலமேடு, சாத்தையாறு, செம்மினிபட்டி பகுதிகளில் வன விலங்குகள் குறிப்பாக காட்டெருமைகள் பயிர்களை நாசம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த வனத்துறையினர் பயிர்களை நாசம் செய்வது காட்டெருமைகள் அல்ல எனவும், நிலப்பரப்பில் சுதந்திரமாக சுற்றித்திரியும் கோவில் காளைகள் தான் எனவும் பதிலளித்தனர். வன விலங்குகளால் பாதிப்படையாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இயலாது எனவும் குறிப்பிட்டார்கள்.
அப்போது வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன், விவசாயிகளின் புகார் தொடர்பாக விலங்குகளின் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் கேரளாவிற்கு ஆட்டு உரம் அனுப்பப்படுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்த நிலையில், ஆட்டு உரமானது கனிமச்சத்து இல்லாததால் அதுப்போல் தடை செய்ய முடியாது என்று ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் காண்க:
சூடான காஃபியுடன் தேங்காய் எண்ணெய் கலந்து அருந்தலாமா? கூடாதா?
யாருமே மதிக்கல..வேலையும் தரல- ஒன்றிணைந்து சாதித்த திருநங்கைகள்!