ஜப்பானிய விவசாயிகள் தங்கள் மாடுகளுக்கு வரிக்குதிரை போன்று உடலில் கோடுகளால் வண்ணம் தீட்டுகிறார்கள் என்கிற செய்தி இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. செயற்கை வண்ணம் தீட்டலினால், பூச்சி மற்றும் ஈ தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது என ஜப்பானிய விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து அலசுகிறது இந்த கட்டுரை.
பிரபலமான ஜப்பானிய பிளாக் இன மாடுகள், உயர்தர வாக்யு மாட்டிறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகளான கேட்ஃபிளைஸ் மற்றும் கால்நடை ஈக்கள் ஆகியவற்றினால் ஜப்பானிய பிளாக் இன மாடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பூச்சிகள் கால்நடைகளுக்கு துன்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் இனப்பெருக்க விகிதத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது, இது இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது.
கைக்கொடுக்கும் வரிக்குதிரை முறை:
ஜப்பானிய மாகாணமான யமகட்டாவில் உள்ள விவசாயிகள் ஈக்கள் மற்றும் இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளைக் கையாள்வதற்கான ஒரு புதுமையான அணுகுமுறையைக் கொண்டு வந்துள்ளனர்: தங்கள் கால்நடைகளை வரிக்குதிரை போன்று வண்ணம் தீட்டுகின்றனர். வரிக்கோடுகள் வரையப்பட்ட கால்நடைகள் குறைவான மன அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், வண்ணம் பூசப்படாத மற்ற காளைகளுடன் ஒப்பிடும்போது பூச்சி கடித்தல் இந்த மாடுகளில் குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக, விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பூச்சி தாக்குவதைத் தடுக்க அவற்றை அடைத்து வைக்கின்றனர். இருப்பினும் இந்த அணுகுமுறை விலங்குகளின் இயக்கம் மற்றும் மேய்ச்சல் வாய்ப்புகளை கட்டுப்படுத்துவதோடு அவற்றின் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கிறது.
நிமிடத்திற்கு 5 முறை:
கால்நடைகள் வாலை அசைத்து, தலையை அசைத்த அல்லது கால்களை முட்டிக்கொண்ட நேரங்களை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர். இவை அனைத்தும் எதற்கென்றால், ஈக்களை விரட்டும் கால்நடைகளின் குணாதிசயங்களாக பார்க்கப்படுகின்றன.
வர்ண கோடுகள் இல்லாத கால்நடைகள் ஒரு நிமிடத்திற்கு 16 முறை எரிச்சலடைகின்றன என்பதைக் கண்டறிந்தனர். அதே நேரத்தில் செயற்கையாக வண்ண கோடுகள் உள்ள கால்நடைகள் நிமிடத்திற்கு ஐந்து முறை தான் மேற்குறிப்பிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளது.
வண்ண கோடிட்ட கால்நடைகளில் ஈக்களின் தாக்கம் ஏன் குறைவு என்பதற்கு அறிவியல் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வழங்கவில்லை. ஆனால், இந்த நடைமுறை பலனளிப்பதால் மாகாணம் முழுவதும் உள்ள விவசாயிகள் இதனை பின்பற்றி வருகின்றனர். லேசான ப்ளீச் அல்லது ஸ்ப்ரே பெயிண்ட் மூலம் செங்குத்து கோடுகளை விவசாயிகள் வரைகிறார்கள் என்று மைனிச்சி செய்தித்தாள் (Mainichi newspaper) தெரிவித்துள்ளது.
விலங்குகளின் உடலில் வரிக்குதிரை போன்ற கோடுகளை உருவாக்க நச்சுத்தன்மையற்ற பொருட்களை ஜப்பானிய கால்நடை விவசாயிகள் பயன்படுத்தி வரும் நிலையில், இவற்றின் அறிவியல் தன்மையை கண்டறிய பன்னாட்டு விஞ்ஞானிகளும் களத்தில் இறங்கியுள்ளனர். ஒருவேளை இவை பூச்சி தாக்குதலுக்கு நிரந்தர தீர்வாக அமையும் பட்சத்தில் மாடுகள் வரிக்குதிரையாக மாறுவது நம்மூரிலும் நிகழலாம்.
Read more:
ஒரு நபர் 79 கிலோவா? உணவுக்கழிவு குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட்!
TNAU சார்பில் நடப்பாண்டு வெளியிடப்பட்ட பழ இரகங்கள்- சிறப்பு என்ன?