மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 25-வது நாளாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் போராட்டம்
தமிழகத்திலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர்.
கடும் குளிரில் தொடரும் போராட்டம்
மாட்டுச் சாணம் மூலம் "பெயிண்ட்" தயாரிப்பு - கால்நடை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம்!!
இந்தநிலையில், விவசாயிகளின் போராட்டம் 25வது நாளாக நீடித்து வருகிறது. டெல்லியில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் போதிலும் அதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால் டெல்லி எல்லைப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழில் கடிதம்
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தமிழில் எழுதியுள்ள கடிதத்தைப் படிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கடிதத்தை அனைவரும் படிக்குமாறு அவர் கேண்டுக்கொண்டுள்ளார்.