News

Monday, 29 March 2021 02:55 PM , by: Daisy Rose Mary

விவசாயிகள், தங்கள் விவசாயத்தோடு தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்கள் முன் வானொலியில் பேசுவது வழக்கம். அந்த வகையில் நேற்று வானொலி மூலம் மக்களிடையே பேசிய அவர், தேனீ வளர்ப்பின் அவசியம் மற்றும் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும், புதுமை, நவீனம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது இல்லையென்றால் வாழ்க்கையே நமக்கு ஒரு சுமையாகி விடக்கூடும். விவசாயத் துறையில், நவீனமயமாக்கல் என்பது காலத்தின் தேவை. மிகத் தாமதமாகி விட்டது. நாம் பல காலத்தை விரயம் செய்து விட்டோம் என்றார்.

புதுமைகள் அவசியம்

விவசாயத் துறையில் வேலைவாய்ப்புக்களுக்கான புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், பாரம்பரியமான விவசாயத்தோடு கூடவே, புதிய சாத்தியக்கூறுகளையும், புதிய கண்டுபிடிப்புக்களையும் ஏற்பது மிகவும் அவசியமான ஒன்று. வெண்மைப் புரட்சியின் போது, தேசம் இதை அனுபவரீதியாக உணர்ந்தது என குறிப்பிட்டார்.

இனிப்பு புரட்சி

இப்போது தேனீ வளர்ப்பும் கூட, இதே போன்றதொரு சாத்தியக்கூறை நமக்கு அளிக்கிறது. தேனீ வளர்ப்பு இப்போது தேசத்தின் தேன் புரட்சி அல்லது sweet revolutionக்கான ஆதாரமாக ஆகி வருகிறது. அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகள் இதோடு தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள், புதுமைகள் புகுத்தி வருகிறார்கள் என்றார்.

எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தில், டார்ஜீலிங்கில் இருக்கும் ஒரு கிராமம் குர்தும். உயரமான மலைகளுக்கு இடையே, புவியியல் ரீதியான சங்கடங்கள் இருந்தாலும், இங்கே மக்கள் தேனீ வளர்ப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்; இன்று இந்த இடத்திலிருந்து பெறப்படும் தேனுக்கென சிறப்புத் தேவை இருக்கிறது. இதனால் விவசாயிகளின் வருவாயும் அதிகரித்து வருகிறது.

மக்கள் விரும்பும் இயற்கை தேன்

மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் பகுதிகளில் இயற்கையான தேன், உலகெங்கிலும் விரும்பி ஏற்கப்படுகிறது. இதைப் போலவே குஜராத்திலே எனக்கு ஒரு தனிப்பட்ட அனுபவமும் உண்டு. குஜராத்திலே பனாஸ்காண்டாவில் 2016ஆம் ஆண்டிலே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, இங்கே இத்தனை சாத்தியக்கூறுகள் இருக்கும் போது, ஏன் பனாஸ்காண்டாவின் விவசாயிகள் இனிப்புப் புரட்சிக்கென ஒரு புதிய அத்தியாயத்தைப் படைக்கக்கூடாது என்று வினவினேன். மிகக் குறைந்த காலத்தில், பனாஸ்காண்டா பகுதி, தேன் உற்பத்திக்கான முக்கியமான மையமாக மாறி விட்டது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ந்து போவீர்கள் என்றார்.

தேனீ வளர்ப்பு & தேன் மதிப்புக்கூட்டு பொருட்கள்

தேனீ வளர்ப்பிலே, தேன் வாயிலாக மட்டுமே வருமானம் கிடைப்பதில்லை, மாறாக தேன் மெழுகும் கூட வருவாயை அதிகப்படுத்துவதற்கான ஒரு பெரிய வழியாக இருக்கிறது. மருந்தியல் தொழில், உணவுத் தொழில், நெசவு மற்றும் அழகுப் பொருள் தொழில்துறை என அனைத்து இடங்களிலும் தேன் மெழுகிற்குத் தேவை இருக்கிறது.

தேன் தேவை அதிகரிப்பு

நமது தேசம் தற்போது தேன்மெழுகினை இறக்குமதி செய்து வருகிறது, ஆனால், நமது விவசாயிகள், இந்த நிலையினை விரைவாக மாற்றி வருகிறார்கள். அதாவது ஒருவகையில், தற்சார்பு பாரத இயக்கத்திற்கு வலுகூட்டி வருகிறார்கள். இன்று உலகமனைத்தும் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை ஆரோக்கியப் பொருட்களை ஆர்வத்தோடு கவனிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் தேனுக்கான தேவையும் விரைவாக அதிகரித்து வருகிறது.

தேசத்தில் அதிக அளவு விவசாயிகள், தங்கள் விவசாயத்தோடு கூடவே, தங்கள் வயலில் தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதோடு, அவர்களின் வாழ்க்கையில் இனிப்புச் சுவையையும் சேர்க்கும் என பிரதமர் மோடி பேசினார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)