கூடலூரில் நோய் தாக்காமல் இருக்க குறுமிளகு கொடிகளில் மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குறுமிளகு சாகுபடி
கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பருவமழை பெய்து வருகிறது. இதனால் பச்சை தேயிலைக்கு இணையாக காபி, குறுமிளகு, ஏலக்காய், இஞ்சி, கிராம்பு உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் விவசாய பணிகள் களை கட்டி உள்ளது. குளிர்ந்த காலநிலை காணப்படுவதால் இஞ்சி, குறுமிளகு உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
பராமரிப்பு பணி
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மழையின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. மழை மற்றும் வெயில் என காலநிலை மாறி மாறி நிலவுவதால் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இஞ்சி, குறுமிளகு விவசாயிகள் தங்கள் பயிர்களை பராமரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக குறுமிளகு கொடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் மே மாத இறுதியில் தொடங்கி நவம்பர் வரை மழை பெய்ய வேண்டும். ஆனால் நடப்பு ஆண்டில் கடந்த மாதம் மழை பெய்யவில்லை. இதனால் தாமதமாக மழை பெய்து வருகிறது.
மருந்து தெளிப்பு
தற்போது குறுமிளகு கொடிகள் பூக்கும் தருவாயில் உள்ளது. இதனால் நோய்த்தாக்குதல் ஏற்படாமல் தடுக்க பலர் முன்னெச்சரிக்கையாக (Precautions) மருந்துகள் தெளித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் குறுமிளகு கொடிகளுக்கு மருந்துகள் தெளிப்பதில்லை.
தொடர் பராமரிப்பு காரணமாக நவம்பர் மாதம் கொடிகளில் காய்கள் விளைந்து காணப்படும். இறுதியாக பிப்ரவரி மாதம் குறுமிளகு அறுவடை (Harvest) நடைபெறும். தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குறுமிளகு விளைச்சல் நன்கு காணப்படும்.
மேலும் படிக்க
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்!