விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட புதுச்சேரி மாநிலத்தில், மொத்த நிலப்பரப்பில் 19,510 எக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதில், 18,238 எக்டேரில் சம்பா, நவரை மற்றும் சொர்ணவாரி என மூன்று பட்டங்களில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் விவசாயத்தை ஊக்குவித்திட, அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது. அதன்படி, விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், உயிர் உரம், பூச்சி கொல்லி உள்ளிட்ட இடு பொருட்கள் மற்றும் வேளாண் கருவிகளை 'பாசிக்' நிறுவனம் மூலம் மானிய விலையில் வழங்கி வந்தது. இது, விவசாயிகளுக்கு பேருதவியாக இருந்தது.
விதை நெல் (Paddy Seed)
நிர்வாக சிக்கல் காரணமாக பாசிக் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு முற்றிலுமாக முடங்கியது. அப்போதைய அரசு, விதை நெல் தனியாரிடம் வாங்கிக் கொள்ளுமாறும், அதற்கான மானியம் பின்னர் வழங்கப்படும் என அறிவித்தது. இதனால், வேறு வழியின்றி விவசாயிகள், தனியாரிடம் கூடுதல் விலை கொடுத்து விதை நெல் வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆனால், அரசு அறிவித்தபடி விதை நெல்லுக்கான மானியம் வழங்கவில்லை. தற்போதைய முதல்வர், கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில், மீண்டும் பாசிக் மூலம் விதை நெல் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி பாசிக் விற்பனை நிலையங்கள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை விதை நெல் விற்பனை துவங்கப்படவில்லை.
இந்நிலையில், புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், வில்லியனுார், நெட்டப்பாக்கம், ஏரிப்பாக்கம், பண்டசோழநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 எக்டேர் பரப்பளவில் சொர்ணவாரி சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
விதைப் பற்றாக்குறை (Seed Shortage)
நாற்று விட விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் அலைந்து கொண்டுள்ளனர். வேறு வழியின்றி தனியாரிடம் கூடுதல் விலை கொடுத்து விதை நெல் வாங்கி, நாற்று விடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், முதல்வர் அறிவித்தபடி, பாசிக் நிறுவனம் மூலம் விதை நெல் மானிய விலையில் வழங்கிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோன்று, மண் வளத்தை தக்கைப்பூண்டு மற்றும் சணப்பை மூலமே பாதுகாத்திட முடியும்.
இதற்காக மாநில அரசு செயல்படுத்தி வந்த திட்டமான தக்கை பூண்டு மற்றும் சணப்பை விதைகள் மானியத்தில் வழங்குவதும் கடந்த மூன்றாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. மண்வளத்தை பாதுகாத்திட, சணப்பை மற்றும் தக்கை பூண்டு விதைகளை மானியத்தில் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க