ரோனிஹால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஹெஸ்காம் (HESCOM) மின் நிலையத்திற்கு உயிருள்ள முதலையைக் கொண்டு வந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் மின்சாரத் துறை அதிகாரிகள் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்காவிட்டால் முதலையினை அலுவலகத்திற்குள் விட்டுவிடுவோம் என்றும் பயம் காட்டியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்டோபரில் எதிர்பாராத விதமாக 16,000 மெகாவாட் தேவையினை கர்நாடக அரசு எதிர்க்கொண்டதாக முன்னணி செய்தி ஊடகம் தகவல் ஒன்றினை வெளியிட்டது. மின் தேவையினை ஈடு செய்ய வேறு வழியில்லாமல் மின்வெட்டு ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பகல் நேரத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ள சூழ்நிலையில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை இரவு நேரத்தில் தான் மேற்கொள்கின்றனர். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றனர்.
இந்நிலையில் மாநிலத்தில் தொடர்ந்து நீடிக்கும் மின்வெட்டுகளால் சலிப்படைந்த கர்நாடக விவசாயிகள் முதலையினை மின்நிலையத்திற்கு கொண்டு மின் துறை அதிகாரிகளை எச்சரித்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
கோல்ஹாரா தாலுகாவின் ரோனிஹால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஹெஸ்காம் மின் நிலையத்திற்கு கர்நாடக விவசாயிகள் டிராக்டர் ஒன்றுடன் உள் நுழைந்தனர். திடீரென்று டிராக்டரிலிருந்து முதலை ஒன்றினை கயிற்றில் கட்டி கீழே இறக்கினர். இதனால் மின் துறை அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மிகவும் ஆக்ரோஷத்துடன் பேச தொடங்கிய விவசாயிகள் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவில்லை என்றால் முதலையினை இங்கேயே விட்டுவிடுவோம் எனவும் மிரட்டத் தொடங்கினர். இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கடந்த திங்களன்று சமூக ஊடகங்களில் இதுத்தொடர்பான வீடியோ வைரலாகியது. இதுக்குறித்த பேசிய விவசாயிகள், பகல் நேரத்தில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே போதிய மழை பெய்யாத காரணத்தினால் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளோம். மின்சாரம் இரவு நேரத்தில் இருப்பதால் நாங்கள் இருள் சூழ்ந்த வேளையில் வயல்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். அப்போது பாம்புகள் மற்றும் முதலைகள் உள்ளிட்ட ஆபத்தான ஊர்வன இருளில் தங்கள் வயல்களுக்குள் வருவதால், நாங்களும் கிராமவாசிகளுக்கு கடுமையாக அவதியுறுகிறோம் என தங்கள் தரப்பு விளக்கத்தை முன்வைத்துள்ளனர்.
நீண்ட போரட்டத்திற்கு பின்னர் மின் துறை அலுவலகத்துக்கு வருகைத் தந்த வனத்துறை அதிகாரிகளால் முதலை மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், விவசாயிகள் மின் மோட்டார் பம்புகளை அதிக அளவில் பயன்படுத்தியதே மின் நுகர்வு அதிகரித்ததற்கு காரணம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
ரெஸ்ட் எடுத்து அடிக்கும் கனமழை- 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
CARI-NIRBHEEK: விவசாயிகளுக்கு ஏற்ற கோழி இனம்! அப்படி என்ன சிறப்பு?