தமிழ் புத்தாண்டான நேற்று, பாரம்பரிய முறைப்படி வயல்களில் நல்லேர் பூட்டி, விவசாயிகள் சாகுபடி (Cultivation) பணியை துவக்கினர். காவிரி பாசன டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில், விவசாயம் தழைத்தோங்க வேண்டி, விவசாயிகள் நல்லேர் பூட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில், விவசாயிகள் நல்லேர் பூட்டி வழிபாடு நடத்தினர்.
நல்லேர் பூட்டி வழிபாடு
காலப்போக்கில், விவசாயம் பொய்த்து போனதாலும், இயந்திரமயம், கால்நடை வளர்ப்பு குறைவு போன்ற காரணங்களால், நல்லேர் பூட்டும் நிகழ்வும் குறைந்து போனது. இருப்பினும், ஒரு சில கிராமங்களில் நல்லேர் பூட்டுவது தொடர்ந்து வருகிறது. நேற்று, தஞ்சாவூர் அடுத்த, ஆச்சம்பட்டி கிராமத்தில், விவசாயிகள், கிராம மக்கள், கோவில் முன், ஏர் கலப்பை, உழவு மாடு, விதைகளை வைத்து பூஜை செய்தனர்.
பாரம்பரிய முறை
பின், ஊர்வலமாக சென்று, வயல்களில், பழங்கள் (Fruits), அரிசி, விதை நெல், நவதானியம் வைத்து, சூரிய பகவானை (Sun) வழிபட்டனர். தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி, ஏர் கலப்பையால் வயலை உழுது, விதை நெல் தூவி, சாகுபடி பணிகளை துவக்கினர். விவசாயிகள் கூறும்போது, 'மன்னர்கள் காலத்தில், தங்க ஏர் கலப்பையால் நல்லேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில், தற்போது, மர ஏர் கலப்பை பூட்டி நடந்து வருகிறது. வரும் தலைமுறையினர், பாரம்பரியத்தை தொடர வேண்டும்' என்று விவசாயிகள் கூறினர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இலாபகரமாக மாட்டுப்பண்ணையை வழிநடத்த சில டிப்ஸ்!
தமிழக மக்களுக்கு, தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!