கொள்முதல் செய்யப்பட்ட விளைப்பொருட்களுக்கு 40 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை அதற்கான பணம் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு அதிகாரிகள் உரிய முறையில் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பானது (NAFED) விவசாய விளைப்பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் கூட்டுறவுகளின் உச்ச அமைப்பாக திகழ்கிறது. விளைப்பொருட்களின் கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் இதன் கீழ் நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில் தான் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் செயல்பாடுகளால் தென்னை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 40 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் செய்த விளைப்பொருட்கள் NAFED- பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மே 31 ஆம் தேதி வரை ஏழு கொள்முதல் நிலையங்கள் மூலம் 7,294 விவசாயிகளிடம் இருந்து 11,170 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பொங்கலூரில் இருந்து 2691 டன்னும், உடுமலைப்பேட்டையில் இருந்து 2,328 டன் கொப்பரையும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய இந்தக் கொள்முதல் செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைகிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் உ.பரமசிவம் பேசுகையில், "ஒரு கிலோ தேங்காய், 108 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. திருப்பூர் மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள், கொப்பரை கொள்முதல் நிலையங்கள் மூலம், ஒரு ஏக்கரில், 200 - 300 கிலோ கொள்முதல் செய்கின்றனர். ஆனால், பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு விவசாயி ரூ. 30,000-40,000 பணத்தினை பெற 40 நாட்களுக்கு மேலாக காத்திருக்க நேரிடுகிறது.” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (உடுமலைப்பேட்டை) செயலர் சி.மனோகரன், முன்னணி நாளிதழ் ஒன்றிடம் பேசுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் தென்னை விளைநிலங்கள் அதிகம் உள்ளதால், கடந்த 3 மாதங்களாக கொள்முதல் நடைப்பெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 கொப்பரை கொள்முதல் நிலையங்களில் தலா 200-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் தங்களது விளைபொருட்களுடன் வருகிறார்கள். ஆனால், கொள்முதல் நிலைய அதிகாரிகள், பணம் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போவதற்கு NAFED தான் பொறுப்பு” என தெரிவிக்கிறார்கள் என்றார்.
NAFED - TN பிரிவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில சர்வர் பிரச்சனைகள் இருந்தன, ஆனால் தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. தவிர, மத்திய சேமிப்புக் கழகத்தின் (CWC) குடோன்களுக்கு விளைப்பொருட்கள் வந்த பிறகு, கிடங்கு ரசீதுகள் (WHR) வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்திலிருந்து NAFED-க்கு மாற்றப்படும். இத்திட்டத்தில் சில காலதாமதங்கள் உள்ளதால், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைப்பதில்லை".
இருப்பினும் விவசாயிகளுக்கு நிச்சயம் பணம் கிடைக்கும்” என்றார். கொள்முதல் செய்யப்பட்ட விளைப்பொருட்களுக்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண்க:
27 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழை- சென்னை மக்கள் அவதி