
நிவர் மற்றும் புரெவி புயல் தாக்குதலால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் மட்டும் குறைந்தது 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் (Crops) நீரில் மூழ்கின. இந்த தொடர் கன மழையால் கடலூர் நகரப் பகுதி மற்றும் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான நிலப்பரப்புகளிலும், விவசாய விளை நிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இதுபோன்ற பேரிடர் காலங்களில் தமிழகத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டமாக கடலூர் (Cuddalore) உள்ளது.
கடலூரை மிரட்டும் புயல்:
2011ஆம் ஆண்டு தானே (Thane) புயல் வந்த நேரத்தில் கடலூர் மாவட்டம் அதுவரை எதிர்பார்த்திராத பாதிப்புகளை சந்தித்தது. கடலூர் மாவட்டத்தின் பொருளாதாரத்துக்கு முக்கியப் பங்களிப்பை செலுத்தும் முந்திரி, பலா மரங்கள் சாய்ந்து நீண்டகால பொருளாதாரப் பாதிப்புக்கு காரணமானது. 2015ஆம் ஆண்டு வந்த தொடர் கன மழை (Heavy Rain) காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளப் பெருக்கால் மூழ்கியது. அப்போது கடலூர் மாவட்டம் மீண்டும் அதிக சேதத்தைச் சந்தித்து. இதனிடையே நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் வலுவிழந்த காரணத்தினால் கடலூர் அதிஷ்டவசமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தப்பியது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன.
வெள்ளத்தில் மூழ்கியது கடலூர்:
கனமழையின் காரணமாக, முதல் கட்டத் தகவல்களின் அடிப்படையில் 70 முதல் 80 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாகத் தெரிகிறது. இரண்டு நாட்களில் தண்ணீர் வடிந்தால் பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். பயிர்க் காப்பீடு (Crop Insurance) செய்திருந்தால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும். பயிர்க் காப்பீடு செய்யவில்லை என்றால், பாதிப்பு இருந்தால் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீரில் மூழ்கிய பயிர்:
தற்போதைய பருவம் பயிரில் பூ விடும் பருவம். இதுபோன்ற நேரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக தண்ணீரில் பயிர்கள் மூழ்கி இருப்பதால் பெரிய அளவில் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காப்பீடு என்பது ஒரு புறம் இருந்தாலும் கூட நிவாரணம் உரிய அளவில் வழங்கப்பட வேண்டும். அடுத்த ஒரு மாதத்தில் அறுவடைக்கு (Harvest) தயாராக வேண்டிய நேரத்தில், இதுபோன்று மழை வந்த காரணத்தினால் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோம்," என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கனமழையால் ஏரி உடைப்பு!சரிசெய்த விவசாயிகள்!
புயலில் இருந்து பயிர்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை! தோட்டக்கலை துறை அறிவிப்பு!