இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று (28.9.2023) காலமானார். அவருக்கு வயது 98. இந்தியாவின் குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகள் அதிக மகசூல் உற்பத்தி செய்வதை உறுதிசெய்ய உதவிய அதிக மகசூல் தரும் நெல் வகைகளை உருவாக்குவதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு’ என சூளுரைத்து வேளாண் துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார். நாட்டில் உணவுப்பஞ்சத்தை தீர்ப்பதில் இவர் ஆற்றிய பணி மகத்தானது. இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் என கருதப்படும் நிலையில் அவரது மறைவு வேளாண் சார்ந்து செயல்படும் விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக (1961-72), ICAR இன் இயக்குநர் ஜெனரலாகவும், இந்திய அரசின் செயலாளராகவும், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை (1972-79), வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும் (1979-80) பதவி வகித்துள்ளார். மேலும் அறிவியல் மற்றும் வேளாண்மை திட்டக்குழு (1980-82) உறுப்பினராகவும் மற்றும் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரலாகவும் (பிலிப்பைன்ஸ்) (1982-88) பணியாற்றியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில், விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார், இது அதிகரித்து வந்த விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களுக்கு மத்தியில் விவசாயிகளின் துயரங்களைக் கண்டறிய அமைக்கப்பட்டது. கமிஷன் 2006 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது மற்றும் அதன் பரிந்துரைகளில், குறைந்தபட்ச விற்பனை விலையானது (MSP) சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தது 50 சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
சுவாமிநாதனுக்கு 1987 இல் முதல் உலக உணவுப் பரிசு வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை (MSSRF) நிறுவினார். சீன நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு பெற செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
சுவாமிநாதனுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ராமன் மகசேசே விருது (1971) மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது (1986) உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைத் தவிர, எச் கே ஃபிரோடியா விருது, லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது மற்றும் இந்திரா காந்தி பரிசு ஆகியவற்றையும் பெற்று உள்ளார்.
உணவுப் பொருட்களுக்காக அண்டை நாடுகளின் கையை எதிர்ப்பார்த்து இருந்த காலத்தை மாற்றி,உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு வேளாண் சார்ந்து இயங்கும் கிரிஷி ஜாக்ரான் சார்பிலும் இரங்கல் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
இதையும் காண்க: