இன்று (பிப்,1) தாக்கலான மத்திய பட்ஜெட்டானது (Federal Budjet) அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளதாக பிரதமர் மோடி (PM Modi) புகழாரம் சூட்டியுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்கள் இருப்பதாக பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
மோடி புகழாரம்
கடினமான கொரோனா (Corona) சூழ்நிலைகளுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். இன்றைய பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறது மற்றும் உலகளவில் தன்னம்பிக்கையை வளர்க்கும். மேலும், விவசாயிகளின் வருமானத்தை (Income) அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. வேளாண் துறையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விவசாயிகள் எளிதாக கடன் (Loan) பெற முடியும். சாமானிய மக்கள் மீது வரிச்சுமையை (Tax) இருக்கும் என்று பலரும் நினைத்தார்கள். இருப்பினும், நாங்கள் ஒரு வெளிப்படைத்தன்மை நிறைந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தினோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களுக்கு முக்கியத்துவம்:
வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், நமது இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள், உள்கட்டமைப்பிற்கான புதிய பிராந்தியங்களை உருவாக்குதல், தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேறுதல் உள்ளிட்ட புதிய சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான அணுகுமுறையை இந்த பட்ஜெட்டில் எடுத்துள்ளோம். சிறப்பான மாற்றங்களை கொண்டுவந்து அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. நாட்டின் சுகாதார திட்டங்களை பட்ஜெட் ஊக்குவிக்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி வரவேற்பு:
இன்று வெளியான மத்திய பட்ஜெட்டை தமிழக முதல்வர் பழனிசாமி வரவேற்றுள்ளார். இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், குறிப்பாக தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய நிதியுதவியை மேலும் உயர்த்தி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் 3,500 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். சென்னை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கும், கடல் பாசி உற்பத்தி பூங்கா (Sponge Park) அமைப்பதற்கான திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி. நாடு முழுவதும் 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதில் இரண்டு ஜவுளிப் பூங்காக்கள் தமிழகத்தில் (தென் மாவட்டங்களில் ஒன்றும், சேலத்தில் ஒன்றும்) அமைத்திட வேண்டும் கோரிக்கை வைக்கிறேன் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்