உர நிறுவனமான நீயூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா நிறுவனம், எஸ்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு உரம் விற்பனை செய்தது. விற்பனைக்குப் பிறகு, நீயூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா நிறுவனம், எஸ்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால், கடுமையான நஷ்டத்திற்கு உள்ளானது எஸ்.கே. எண்டர்பிரைசஸ். இதனால், சட்டரீதியாக வழக்குத் தொடர்ந்தது இந்நிறுவனம். பீகார் மாநிலத்தில் பெகுசராய் பகுதியில் உள்ள தலைமை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீயூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் மீது எஸ்.கே. எண்டர்பிரைசஸ் புகார் மனு அளித்தது. இந்தப் புகாரில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
உர விற்பனை (Fertilizer Sale)
நீயூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா உர நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததன் விளைவு தான், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மீதும் வழக்குப் பதிவாக காரணமாக அமைந்துள்ளது. எஸ்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான நஷ்டத்தை அடுத்து, உரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டது நியூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா நிறுவனம். இதற்குப் பதிலாக ரூபாய் 30 இலட்சத்துக்கான காசோலையை எஸ்.கே. நிறுவனத்திடம் வழங்கியது. எஸ்.கே. எண்டர்பிரைசஸ், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியுள்ளது. ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாத காரணத்தால் காசோலை ரிட்டர்ன் ஆகியுள்ளது.
இதனை அடுத்து, எஸ்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனம் சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நியூ குளோபல் ப்ரொட்யூஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த விதப் பதிலும் வராத காரணத்தால், எஸ்.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக, பீகார் பெகுசராய் பகுதியிலுள்ள தலைமை மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni)
நியூ குளோபல் இந்தியா நிறுவனத்தினுடைய உர விற்பனை விளம்பரத்தில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி நடித்திருந்தார். இந்த நிலையில், அந்த உரத்தை மகேந்திர சிங் தோனி விளம்பரப்படுத்திய காரணத்தால், அவர் உள்பட 8 பேர் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. வருகின்றன ஜூன் மாதம் 28 ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது.
நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் விளம்பரங்களில் நடித்து சம்பாதிப்பது வழக்கம். ஆனால், நடிக்கப் போகும் விளம்பரத்தின் உண்மைத் தன்மையை அறியாது நடித்தால், ஆபத்தும் வரும் என்பதற்கு இந்த சம்பவம் முன்னுதாரணமாக திகழ்கிறது.
மேலும் படிக்க
கொப்பரைத் தேங்காய் மூட்டைகளுக்கு QR Code!
எலுமிச்சையில் நுண்ணூட்ட மேலாண்மை: மகசூலை அதிகரிக்கும் நுடபம்!