தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை (NorthEast Monsoon) சீசன் தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாய பணிகளில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வந்தாலும் நெற்பயிர் களுக்கு தேவையான உரம் மற்றும் யூரியா கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர்.
ஒரு மூட்டை
இதனிடையே ஆர்.எஸ். மங்கலம், சோழந்தூரை சுற்றி உள்ள பல கிராமங்களில் ஒரு மூடை உரம் மற்றும் யூரியாவை வாங்கி 3 அல்லது 4 விவசாயிகள் அதை தங்களுக்குள் பங்கு பிரித்து நெற் பயிர்களுக்கு (Paddy Crops) தூவி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஒரு மூட்டை யூரியாவை 2 விவசாயிகள் சேர்ந்து பங்கு பிரித்து பயிர்களுக்கு தூவி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி முத்துகூறியதாவது: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. நெற்பயிர்கள் மழையால் நன்கு வளர்ந்து வருகிறது. மழை சரியாக பெய்து வரும் நிலையில் நெற்பயிர்கள் செழிப்பாக வளர தேவையான உரம் (Compost) மற்றும் யூரியா கிடைப்பதில் கடும் தட்டுப்பாடாக உள்ளது. யூரியா மற்றும் உரம் சரிவர கிடைப்பதில்லை.
தட்டுப்பாடு
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ஒரு மூட்டை யூரியா தூவ வேண்டும். ஆனால் யூரியா தட்டுப்பாடாக இருப்பதால் 2 ஏக்கர் நெற்பயிருக்கு ஒரு மூடை தூவி வருகிறோம். யூரியா தட்டுப்பாட்டால் இந்த ஆண்டு நெற்பயிர்கள் செழிப்பாக வளருமா என்ற ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது.
விவசாயிகள் அனைவருக்கும் உரம் மற்றும் யூரியா கூடுதலாக கிடைப்பதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க
நிலக்கடலை சாகுபடியில் உரச்செலவைக் குறைக்கும் யுக்திகள்!
வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்!