உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் யூரியா 3279 மெ.டன்னும், டிஏபி 884 மெ.டன்னும், பொட்டாஷ் 264 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 1714 மெ.டன்னும், எஸ்எஸ்பி 263 மெ.டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது (08.06.2023-ன் தரவுகளின் படி). இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் உர விற்பனை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு-
விவசாயிகள் தழைச்சத்து மட்டுமே உள்ள யூரியா உரத்தினை மட்டும் பயிர்களுக்கு பயன்படுத்தாமல், பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து உரங்கள், நன்றாக மகசூல் பெறுவதற்கு தேவையான மணிச்சத்து உரங்கள், பயிர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற தேவையான சாம்பல் சத்து உரங்களை மேலும், இம்மூன்று சத்துக்களும் கலந்த காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி பயன்பெற அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இம்மூன்று சத்துக்களும் பயிர்களுக்கு சமச்சீராக கிடைக்கும் வகையில் விவசாயிகள் உரமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விற்பனை விலையிலேயே உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுபாட்டு சட்டம் 1985- ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளிடம் ஆதார் எண் பெற்று, விற்பனை முனைய கருவியில் கைரேகை பதிவு செய்தும், இரசீது வழங்கியும், சாகுபடி செய்யப்படும் பயிருக்கு தேவைப்படும் உரங்களை மட்டுமே உர விற்பனையாளர்கள் வழங்க வேண்டும்.
மானிய உரங்கள் விற்பனை செய்யும் போது சில உர விற்பனையாளர்கள், விவசாயிகளின் விருப்பதிற்கு மாறாக இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது.
விவசாயிகள் கேட்கும் உரங்கள் மட்டுமே வழங்க வேண்டும். உரங்களின் விலை, இருப்பு விபரங்கள் விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் தினமும் குறிப்பிட வேண்டும்.
பிற மாநிலம் மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் உரங்கள் வழங்கக் கூடாது. உரக்கட்டுப்பாட்டு சட்டத்திற்குட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்படும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
உரங்கள் மற்றும் உர விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் இருந்தால் 04562-252705 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார். விவசாயிகள் அளவுக்கு மீறி உரத்தினை பயன்படுத்தும் போது உற்பத்தி பாதிக்கவும், மண்ணின் தன்மை கெட்டுப்போகவும் வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்க.
மேலும் காண்க: