இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏலக்காய் ஏற்றுமதியினை மீண்டும் துவங்குவதற்கு ஸ்பைசஸ் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏலக்காய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஏலக்காய் சாகுபடியில் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டுமே நடைபெறுகிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 80 சதவீதத்தை கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சாகுபடி செய்கின்றனர். இம்மாவட்டத்தில் மட்டும் 27 ஆயிரம் எக்டேர் அதிகமான நிலபரப்பில் சாகுபடி செய்து வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய்க்கு நல்ல மவுசு இருந்தது வருகிறது. இதன் மணம் மற்றும் சுவை பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்வாக இருந்தததால் ஏலக்காய் ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தது வந்தது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளான குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்தது. இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்து வந்தது.
கடந்த ஆண்டு துவக்கம் முதலே இறக்குமதி செய்ய வளைகுடா நாடுகள் தடை விதித்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட ஏலக்காயில் நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன் படுத்தப்பட்டிருப்பதால் வாங்க மறுத்த விட்டன. இதன் காரணமாக அந்நியச்செலாவணி குறைந்ததுடன் விவசாயிகளும் கடுமையாக பாதிப்படைந்தனர்.
தற்போது ஏலக்காய் கிலோவிற்கு ரூ. 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் ஏற்றுமதிக்கான அனுமதி கிடைத்தால், இந்திய ஏலக்காய்க்கு இன்னமும் விலை கூடுதலாக கிடைக்கும். ஏலக்காய் சாகுபடி மற்றும் வர்த்தகத்தை கவனித்து வரும் ஸ்பைசஸ் வாரியம், வளைகுடா நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஏலக்காய் ஏற்றுமதிக்கு அனுமதி பெற்று தர வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran