முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த தருவாயில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையான திட்டமாக கருதப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குதல் வருகிற செப்டம்பர் 15-ஆம் நாளன்று தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து நியாய விலை கடைகளிலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும்போது பயனாளர்களின் கைவிரல் ரேகையினை பதிவு செய்வது கட்டாயம் என தமிழ்நாடு அரசின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 17 ஆம் தேதிக்குள் அனைத்து நியாய விலை கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்யத் துணை ஆணையர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
பயோமெட்ரிக் ஸ்கேனர் வழங்குவதற்கான வழிமுறைகளை உத்தரவு நகலுடன் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
- "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" கீழ் விண்ணப்பங்களை பெறும் முகாம்களின் போது e-KYC அங்கீகாரத்திற்காக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கைரேகை ரீடர்கள் தேவைப்படும்.
- துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு)/ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் நியாய விலைக் கடையில் தேவையான அளவு பயோமெட்ரிக் சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- போதுமான அளவு கைரேகை ரீடர்கள் சேகரிக்கப்பட்டு, 17 ஜூலை 2023 அன்று அல்லது அதற்கு முன் வேலை செய்யும் நிலையில் அந்தந்த நியாயவிலை கடைகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு கைரேகை ரீடருக்கும் அதற்கான ஒரு வரிசை எண் (ஐடி) உள்ளது. எனவே பயனாளிகளின் பட்டியலை கடை குறியீடு மற்றும் கைரேகை ரீடரின் தொடர்புடைய வரிசை எண்ணுடன் தயார் செய்து, அது மீண்டும் அதே கடைக்கு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்.
நியாய விலைக் கடைகளுக்கு தேவையான எண்ணிக்கையிலான கைரேகை ரீடர்களை ஏற்பாடு செய்வதற்கு துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு)/ மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் தான் பொறுப்பு.
கணக்கெடுப்பு மற்றும் சிறப்பு முகாம்கள் நிறைவு செய்யப்பட்ட பின் நியாய விலைக் கடை சாதனங்கள் தொடர்பான அடையாள எண்கள் மற்றும் கடைக் குறியீடுகளின் விவரங்களைப் பராமரிக்க, DC/DSO அலுவலகத்தால் தனிப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு) / மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் பயோமெட்ரிக் ஸ்கேனர்களின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், அது வேலை செய்யும் நிலையில் திரும்பும் வகையில் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
Central Bank of India: 1000 மேனேஜர் காலி பணியிடம்- விண்ணப்பிக்கும் முறை?