உலகின் முன்னணி இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ‘Flipkart Samarth Krishi’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கும் , உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் ( farmer producer organisations -FPO) தனது இணையதளத்தின் மூலம் தேசியளவிலான சந்தை இணைப்புக்கு பாதை அமைத்துத்தரும் நோக்கத்துடன் ’Flipkart Samarth Krishi’ என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
‘பிளிப்கார்ட் சமர்த் க்ரிஷி’திட்டம் சந்தை அணுகலை வழங்கவும், அதில் உள்ள சிக்கல்களை எளிமைப்படுத்தவும் உதவும். மேலும் விவசாயிகளின் திறனை வளர்க்கவும் கூடுதலாக, அவர்களின் நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் செயல்படும். திட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயிகள் மற்றும் எஃப்.பி.ஓ.க்களுக்கு விளைபொருட்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து பயிற்சியும் வழங்கப்படும்.
Flipkart இ-காமர்ஸ் தளமானது ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான விவசாயத் துறைகள் உட்பட பல தொழில்துறை மற்றும் இதர அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பினை கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஃப்ளிப்கார்ட் இந்தியா நேரடியாக விவசாயிகள் மற்றும் FPO களிடமிருந்து பருப்பு வகைகள், தினைகள் மற்றும் முழு மசாலாப் பொருட்களையும் பெற இயலும். இதனால் உள்ளூர் விவசாய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் ஊக்கமளிக்கிறது.
பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிறுவன விவகார அதிகாரி ரஜ்னீஷ் குமார் கூறுகையில், “உள்ளூர் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளை உருவாக்குவதற்கும், அவர்களின் விளைப்பொருட்களை தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்கும் விவசாயிகள் மற்றும் FPO-க்களுடன் நேரடியாக ஃப்ளிப்கார்ட் இந்தியா தொடர்பு கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் புத்தாக்க பயிற்சி மற்றும் இ-காமர்ஸ் இணைய பயன்பாடு மூலம் இந்திய விவசாயம் மற்றும் கிராமப்புற சமூகங்களில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக ‘பிளிப்கார்ட் சமர்த் க்ரிஷி’திட்டம் கொண்டுள்ளது. விவசாயிகள் முதல் நுகர்வோர் வரை அனைவருக்குமிடையே ஒரு பிணைப்பு சங்கிலியினை உருவாக்கும்.
அரிசி, பருப்பு வகைகள், முழு மசாலாப் பொருட்கள் மற்றும் தினைகள் போன்ற 100 க்கும் மேற்பட்ட பொருட்களை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது. ஃப்ளிப்கார்ட், இந்தியாவின் 450 மில்லியன் நுகர்வோருக்கு பல்வேறு தரமான தயாரிப்புகளை வழங்க வழிவகை செய்யும்” என்றார்.
இன்றுவரை, ஃப்ளிப்கார்ட் இந்தியா 10,000 விவசாயிகளுக்கு தயாரிப்பு தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்துள்ளது, அதே நேரத்தில் அவர்களின் சந்தை அணுகலை விரிவுபடுத்த உதவும் என கருதப்படுகிறது.
மேலும் காண்க:
ஜூலைக்குள் மீண்டும் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி- உதயநிதி வாக்குறுதி
விசைத்தறிக்கு 1000 யூனிட்.. கைத்தறிக்கு 300 யூனிட் இலவச மின்சாரம்- அரசாணை குறித்து அமைச்சர் விளக்கம்