
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் உயர்ந்தது.
இதற்கு மாநகராட்சி மன்ற ஒப்புதல் வழங்கி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சென்னை நகரின் பழைய பகுதிகளுக்கு சொத்து வரி அதிகமாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குறைவாகவும் சொத்துவரி உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்து உள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் சொத்து வரி உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல்-அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரி, இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் 12½ லட்சம் சொத்துவரி உரிமையாளர்கள் இருக்கின்றனர். சொத்துவரியை அடுத்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. அவை இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்து, மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் 7 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கமாகும். சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. இதில் 23 சதவீதம் சொத்துவரியாக மாநகராட்சி வசூலித்து வருகிறது. 7 சதவீதம் குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூலிக்கிறது. குடிநீர் வரி உயர்வும் கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடதக்கது.
எப்போதெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போது குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் இருக்கின்றன. சொத்துவரி உயர்த்தப்பட்ட அளவில் 7 சதவீதம் குடிநீர் வரி வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு ஒருவருக்கு சொத்துவரி ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்ந்து இருக்கும் பட்சத்தில் உயர்த்தப்பட்ட ரூ.500-க்கு 7 சதவீதம் குடிநீர் வரி உயர்வு கணக்கிடப்படுகிறது. இது வழக்கமான நடைமுறை தான்.
கடந்த 10 வருடத்திற்கு மேலாக குடிநீர் வரி உயர்த்தப்படவில்லை என்பதையும் நாம் மறந்திடக்கூடாது. 2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும். உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினர்.
மேலும் படிக்க:
தோட்டக்கலை சார்பாக 30 நாட்கள் பயிற்சி- போக்குவரத்து செலவும் அரசே ஏற்கும்!!
தோட்டக்கலை துறை காளான் உற்பத்திக்கு 40% வரை மானியம் அறிவிப்பு!