வால்பாறை அருகே மீட்கப்பட்ட, ஒரு வயது ஆண் புலி குட்டிக்கு வனத்தில், இரண்டு ஆண்டுகள் பயிற்சி வழங்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, முடீஸ் பகுதியில், கடந்த செப்டம்பர் 28ல் உடல்நிலை பாதித்த நிலையில், ஒரு வயது ஆண் புலி குட்டியை வனத்துறையினர் மீட்டனர். புலிக்குட்டி வனத்துறை பராமரிப்பில் உள்ளது.
புலிக்குட்டிக்கு பயிற்சி (Training to Tiger cub)
வனத்துறையினர் கூறியதாவது: புலிக்குட்டியை வளர்க்க, மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட மந்திரிமட்டம் பகுதியில், 13 ஆயிரம் சதுர அடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, இடத்தை சுற்றிலும், ஆறு மீட்டர் உயரத்துக்கு வேலி அமைக்கப்படும்.
இந்த வேலியில் இருந்து, 50 அடி தொலைவில், 'சோலார்' மின் வேலி அமைத்து அதன்பின், அகழி வெட்டப்படும். இந்த இடத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்படும். புலிக்குட்டி, இரண்டு ஆண்டுகள் வரை வளர்க்கப்பட்ட பின் வனத்தில் விடுவிக்கப்படும். இறைச்சி கொடுப்பதுடன், உயிருடன் உள்ள கோழி, முயல் வழங்கப்பட்டு, வேட்டைக்கான பயிற்சியளிக்கப்படும்.
கால்நடை மருத்துவர் வாயிலாக, தொடர்ந்து கண்காணிக்கப்படும். புலிக்குட்டி வளர்ப்பது, தமிழக வனத்துறையில் இதுவே முதல் முயற்சியாகும். வனத்துறையின் இம்முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மேலும் படிக்க