காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க மரங்களில் விளைந்துள்ள பலாக்காய்கள் வெட்டி அகற்றப்படுகிறது.
பசுந்தீவன தட்டுப்பாடு
கோடைகாலம் தொடங்கிவிட்டதால், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. உணவு மற்றும் பசுந்தீவன (Green Fodder) தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களை தேடி ஊருக்குள் அதிகளவில் வருகின்றன. இதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள மரங்களில் பலாக்காய்கள் அதிகளவில் விளைந்து இருக்கிறது. இதை தேடி காட்டுயானைகள் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் பலாக்காய்கள் பழுத்துவிட்டால், காட்டுயானைகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மனித-காட்டுயானை மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழலாம்.
வெட்டி அகற்றம்
இதை கருத்தில் கொண்டு காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் வன கோட்ட பகுதியில் மரங்களில் விளைந்துள்ள பலாக்காய்களை வனத்துறையினர் (Forest Department) வெட்டி அகற்றி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டு தோட்டத்தில் விளைந்துள்ள பலாக்காய்களையும் வெட்டி அகற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
பலாப்பழ சீசன்
காட்டுயானைகளுக்கு மிகவும் பிடித்தமான தீவனமாக மூங்கில், பாக்கு, தென்னை, வாழை, பலா உள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், பசுந்தீவன தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் உணவு தேடி காட்டுயானைகள் ஊருக்குள் வருகிறது. இன்னும் சில வாரங்களில் பலாப்பழங்கள் சீசன் தொடங்கிவிடும். அப்போது ஊருக்குள் வரும் காட்டு யானைகள் மீண்டும் வனத்துக்குள் செல்லாமல் இங்கேயே தொடர்ந்து முகாமிட வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க முன்கூட்டியே பலாக்காய்களை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மானாவாரியில் கோடை பருவ சாகுபடியில், அதிக மகசூல் பெற சில நுணுக்கங்கள்!
மரக்கன்று நட விழா தேவை இல்லை: பிரதமரிடம் பாராட்டு பெற்ற யோகநாதன்!