பஞ்சாபில் உணவகம் நடத்தும் சஞ்சய் ராணா என்பவர், கொரோனாவுக்கு எதிரான 'பூஸ்டர்' ஊசி செலுத்திக் கொள்வோருக்கு, இலவசமாக 'சோலா பட்டூரா' என்ற பூரியை இலவசமாக வழங்கிவருகிறார். இதையடுத்து, அங்கு மக்கள் கூட்டம் குவியத்தொடங்கியுள்ளது. சமூகத்தின் மீது இவர் கொண்ட அக்கறையை பிரதமர் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் அரக்கனிடம் தப்ப கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனை ஏற்று, நாடு முழுவதும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தற்போது, 3-வதாக பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பூரி இலவசம்
இந்நிலையில் மத்திய அரசின் இந்த சேவைக்கு ஆதரவாக, பஞ்சாப்பில், உணவக உரிமையாளர் ஒருவர், பூஸ்டருக்கு பூரி இலவசம் என அறிவித்துள்ளார். அதுவும் சோலாப் பூரியாம். பஞ்சாப் தலைநகர் சண்டிகரில், 15 ஆண்டுகளாக சிறிய உணவகம் நடத்தி வருபவர் சஞ்சய் ராணா. அத்துடன் சைக்கிளில் சோலா பட்டூரா உணவையும் வீதிகளில் விற்பனை செய்து வருகிறார். சோலா பட்டூரா என்பது, கொண்டைக்கடலை மசாலா, மற்றும் சோலாபூரி கலந்த சுவையான உணவு. வட மாநிலங்களில் இது மிகவும் பிரபலம்.
சமூக சேவை
இவர் கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, 'தடுப்பூசி செலுத்தியோருக்கு, இலவசமாக சோலா பட்டூரா வழங்கப்படும்' என, அறிவித்தார். இதையடுத்து ஏராளமானோர் தடுப்பூசி போட்ட பின், நேராக சஞ்சய் ராணாவிடம் சான்றைக் காட்டி சுவையான சோலா பட்டூராவை சாப்பிட்டுச் சென்றனர்.
மோடி பாராட்டு
ஏழு மாதங்கள் இலவசமாக சோலா பட்டூரா வழங்கிய சஞ்சய் ராணாவின் புகழ், சமூக வலைதளங்களில் பரவியது. அவரைப் பற்றி பிரதமர் மோடி தன் 'மன் கீ பாத்' உரையில் புகழும் அளவிற்கு பிரபலமானார். இந்நிலையில் இரண்டு 'டோஸ்' கொரோனா தடுப்பூசிக்குப் பின், 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு, இலவசமாக சோலா பட்டூரா வழங்கும் திட்டத்தை சஞ்சய் ராணா துவக்கியுள்ளார்.
மேலும் படிக்க...
ஒரு சரக்கு வாங்கினால், 2 பாட்டில் இலவசம் - குஷியில் குடிமகன்கள்!
கூழ் காய்ச்சும் போது வலிப்பு -பாத்திரத்தில் விழுந்து இளைஞர் மரணம்!