கொரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகள் இனிமேல் பணம் கொடுத்து கொள்முதல் செய்ய தேவையில்லை, மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் தீபாவளி வரை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெலிவிஷனில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவின் 2-வது அலையால் ஒட்டுமொத்த இந்திய தேசமும் திண்டாடி வருகிறது. பெரும்பலான தொழிற்துறைகள் முடங்கியுள்ளன.
கொரோனா 2வது அலை
முதல் அலையில் இருந்து மெல்ல மீண்டதன் மூலம் பெற்ற சிறிய நம்பிக்கையையும் இந்த 2-வது அலை சீரழித்துவிட்டது. அன்றாடம் நிகழும் பல்லாயிரக்கணக்கான பாதிப்புகளும், மரணங்களும் நூற்றாண்டுகளில் இல்லாத பேரழிவுக்கு சாட்சியாக மாறியிருக்கின்றன. ஆட்கொல்லியாக உயிர்களை காவு வாங்கி வரும் இந்த தொற்றுக்கு எதிரான மருந்துகள் இல்லாததால் மீண்டும் பொதுமுடக்கமே தீர்வாக மாறியிருக்கிறது.
முழு ஊரடங்கால் நல்ல பலன்
தீவிரமாக அமல்படுத்திய ஊரடங்கால் மெல்ல நிலைமை மாறி வருகிறது. அதேநேரம் கட்டுப்பாடுகள், ஊரடங்கு போன்றவை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இப்படி சொல்ல முடியாத துயரத்தில் தள்ளப்பட்டிருக்கும் மக்களை, அதில் இருந்து மீட்டெடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பூசி
இதில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி திட்டத்தை அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கும் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளும் கொள்முதல் செய்யும் வகையில் திட்டத்தை பரவலாக்கியது.
இதன்படி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநிலங்களே தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகின்றன. அதைப்போல வெளிநாடுகளில் இருந்தும் நேரடியாக இறக்குமதி செய்யும் நடவடிக்கையிலும் இறங்கின. ஆனால் இந்த பணிகள் மாநிலங்களுக்கு பெரும் சவாலாக மாறி வருகின்றன. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்காததால், பல மாநிலங்களில் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.
மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி
எனவே மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு மத்திய அரசே தடுப்பூசியை இலவசமாக வழங்கும், எனவே தடுப்பூசிக்காக இனி மாநிலங்கள் எந்த நிதியும் செலவிட வேண்டாம் என பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளால், கொரோனா முடிவுக்கு வந்திருப்பதாக மக்கள் கருதக்கூடாது. இந்த போரில் வெற்றி பெறுவதற்காக நாம் தொடர்ந்து கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதுதான் கண்ணுக்குத்தெரியா மற்றும் அடிக்கடி உருமாறி வரும் இந்த தொற்றுக்கு எதிரான முக்கியமான ஆயுதம் ஆகும்.
தீபாவளி வரை ரேஷன் பொருட்கள்
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியபோது பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு 8 மாதங்களாக இலவச ரேஷன் வழங்கப்பட்டது. பின்னர் 2-வது அலை காரணமாக இந்த திட்டம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை தீபாவளி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் நவம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 80 கோடி மக்கள் இந்த இலவச உணவு தானியங்களை பெறலாம் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மேலும் படிக்க...
+2 தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது தமிழக அரசு!
தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! முதல் அமலுக்கு வருகிறது!