கால்நடைகளுக்கான இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் பயன்பெற முடியாத விவசாயிகள் தங்கள் பகுதி கால்நடை மருந்தகங்களை அணுகி வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கால்நடைகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி போட்டுப் பயன்பெறலாம் என்று கால்நடைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோமாரி நோய்
கால்நடைகளைத் தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கோமாரி நோய். இந்நோய், 63 வகையான வைரஸ் கிருமிகளால் பரவுவதாக கூறப்படுகிறதுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்படும் கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், கால் குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் ஏற்படும். பசு,மற்றும் எருமை இனங்கள் இந்நோய் அதிகம் பாதிக்கின்றன. இதன் காரணமாக பால் கறவை குறைகிறது.
மேலும் கறவைப் பசுக்களில் பால் குடித்து வரும் கன்றுகளும் இறக்க நேரிடும். எனவே, இந்நோய் தாக்காமல் இருக்க ஆண்டுக்கு இருமுறை மாடுகளுக்குத் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம்.
தடுப்பூசி முகாம்
இதற்காக, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இதற்கான முகாம் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தடைப்பட்ட முகாம் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் இது வரை பயன்பெறாத கால்நடைகளுக்கு அந்தந்த பகுதி மருந்தகங்களில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கால்நடைகளுக்கு இலவசமாகத் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என்று கால்நடைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் முதல் சுற்றுக்கான தடுப்பூசி அனைத்து மாவட்டங்களின் தற்போது போடப்படுகிறது. இதனை உங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகிக் கூடுதல் தகவல்களைப் பெறலாம் என்றும் கால்நடைத் துறை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் 90% கால்நடைகள் பயன்
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த மார்ச் மாதம் முதல் இது வரை சுமார் 3,66,861 கால்நடைகளில் 3,06,000 கால்நடைகளுக்கு முதல் சுற்றுக்கான கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகப் புதுக்கோட்டைக் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இனை இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது வரை பயன் பெறாதவர்கள் தங்களின் பகுதி கால்நடை மருந்தகங்களை அணுகி வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு தங்களின் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றார்.
மேலும் படிக்க...
சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..!
தென்னந்தோப்பில் மீன் குட்டை அமைப்பவர்களுக்கு ரூ.25000 வரை மானியம்!!
தீவனப்பயிர் சாகுபடிக்கு மானியம் - வேலூர், திருப்பூர் விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!