தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை தடுக்க உரிய நிலைப்பாட்டை எடுப்பதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம் என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தல்களின்போது ஓட்டுகளைப் பெற அரசு பணத்தில் இருந்து இலவச பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இதை தடுத்து நிறுத்தக் கோரியும், அவ்வாறு இலவச அறிவிப்பு வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இலவசங்கள் (Freebies)
இலவசங்கள் தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கபில் சிபலின் கருத்தை அமர்வு கேட்டது. இதற்கு கபில் சிபல் கூறியதாவது: இந்த விவகாரத்தில் நிதி கமிஷன் தான் தலையிட முடியும். மாநிலங்களுக்கான நிதியை ஒதுக்கும்போது, அந்த மாநிலத்தின் மொத்தக் கடன் எவ்வளவு, எந்தளவுக்கு இலவசப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து நிதி கமிஷன் கேள்வி கேட்க முடியும் என அவர் கூறினார்.
இதையடுத்து அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது: இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. ஆனால், ஒரு நிலைப்பாட்டை எடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன். இதை ஒரு முக்கியமான பிரச்னையாக அரசு பார்க்கவில்லையா. இலவச அறிவிப்புகள் தொடர வேண்டுமா, வேண்டாமா. உங்களுடைய பதிலை தாக்கல் செய்யுங்கள். இந்த விவகாரத்தில் நிதி கமிஷனின் கருத்தை கேட்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என அமர்வு உத்தரவிட்டது.
தேர்தலின் இலவசங்கள் தருகிறோம் என்ற அறிவிப்பு இன்று வரை தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பதிலாக, பல நல்ல திட்டங்களை அரசியல் கட்சிகள் கொண்டு வரலாம். அதை விட்டு எதற்கும் உதவாத இலவசங்கள் நாட்டின் சாபக்கேடு தான்.
மேலும் படிக்க
இலவசங்கள் தொடர்ந்தால் நம் நாடும் இலங்கையாக மாறும்: நல்லசாமி எச்சரிக்கை!
ஒரு பொருளை வாங்கிய பிறகு, ஏன் வாங்கினோம் என புலம்புபவரா நீங்கள்?