நாடு முழுவதையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது, ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ். கடந்த நான்கு நாட்களில் பாதிப்புகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை நிலவரப்படி இந்தியாவின் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 213ஆக உள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் 19 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். இதன் காரணமாக நோய்த்தொற்று அதிகரிக்கும் ஆபாயம் உள்ளது. இதுதொடர்பாக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு முன்னதாகவே புதுச்சேரி அரசு சிறப்பு கட்டுபாடுகளுடன் இப்பண்டிகை காலத்தில் மகிழ்ந்திடலாம் என அறிவித்திருப்பதும் குறிப்பிடதக்கது.
அதன்படி, 144 தடை உத்தரவு மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளப்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர அனுமதி வழங்கப்படும். ஊழியர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். புத்தாண்டு பார்ட்டிகளின் போது டிஜே நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை.
பெரிய வளாகங்களில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்த அனுமதி இல்லை. இதனை சம்பந்தப்பட்ட குடியிருப்பு சங்கத்தினர் முறையாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோடு உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் கூடுவதற்கும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் பொது இடங்கள் அல்லது தனிப்பட்ட இடங்களில் சிறப்பு நிகழ்வுகள் என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது என்றும் அரசு கண்டித்துள்ளது.
தேவாலயங்கள் தவிர, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் பொதுமக்கள் ஒன்று கூட, தடை விதிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களில் உரிய கோவிட் வழிகாட்டு நெறிமுறை அதாவது தனிமனித இடைவெளியை கடைபிடித்து நிற்க வரையப்பட்ட வட்டங்களில் நின்று செல்லவேண்டும். மேலும் இங்கு வருவோர் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியம், இவற்றை பின்பற்றி வழிபாடு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலைப் பொறுத்தவரை, தினசரி புதிய பாதிப்புகள் 300 என்ற அளவில் பதிவாகி வருகின்றன. அதில் பெங்களூரு நகர்ப்புற பகுதி மிக முக்கிய அங்கமாக காணப்படுகிறது. 30 மாவட்டங்களில் உயிரிழப்புகள் இல்லாத சூழலில், உடுப்பி மாவட்டத்தில் மட்டும் பதிவாகியிருக்கிறது.
மேலும் படிக்க: