தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை பெறுவதற்காக பொதுமக்கள் கூட்டமாக வருவதை தடுக்கும் பொருட்டு அவர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது.
கரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. அவசர முடிவு என்பதால் பொதுமக்கள் அத்தியாவிசிய பொருள்களை பெறுவதில் சிக்கல் இருப்பதால் அரசு ரேஷன் கடைகள் மூலம் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே சமயத்தில் பொதுமக்கள் கூட்டம் சேர்வதை தடுக்கவும், தவிர்க்கவும் அட்டவணை தயாரிக்கப்பட்டு, நேரம் வாரியாக பிரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிவாரண உதவியாக மாநில அரசு அனைத்து வகை அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும் எனவும், ரூ.1,000 நிவாரண தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவுப்பு வெளியிட்டு இருந்தது. வரும் ஏப்ரல் 2ல் துவங்கி, 15ம் தேதிக்குள் வழங்கி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது, தற்போது ரேஷன் கடைகளில் தேவையான அளவு, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இருப்பு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் ரேஷன் கடை ஊழியர், ஊரக வளர்ச்சித்துறை ,வருவாய்த்துறை, மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கும் பணியை செய்து வருகின்றனர். அதில், நிவாரண பொருள் வாங்க வர வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு இருக்கும். அதே போன்று நிவாரண தொகை பெற கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நாள் ஒன்றுக்கு தலா, 100 நபர்கள் வீதம் வழங்க முடிவு செய்துள்ளது. நிவாரண உதவிகளை பெற வரும் மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுடன் சென்று ரேஷன் கடையை அணுகினால் பார்சலாக இருக்கும் நிவாரண உதவியை கால தாமதமின்றி பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.