தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை நிலைகொண்டிருந்தது. மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்த இது, மேலும் வலுவடைந்து ஞாயிற்றுக்கிழமை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு "கஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரை இலங்கை வழங்கியுள்ளது.
இந்த புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே 980 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இப்புயல் காரணமாக ஆழ்கடல் பகுதியில் பலத்த சூறைக் கற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அதிதீவிர புயலாக வலுவடைந்து வருவதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள, கஜா புயல் சென்னைக்கு கிழக்கே - வட கிழக்கே 770 கி. மீட்டர் தொலைவில் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும். மேற்கு - தென்மேற்காக தமிழகத்தில் வட கடலோர பகுதிகளை நோக்கி கஜா புயல் நகர வாய்ப்புள்ளது.
வரும் வியாழக்கிழமை 15 ஆம் தேதி சென்னை - நாகப்பட்டினம் அருகே முற்பகலில் கரையை கடக்கும். இதனால் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
புயல் காரணமாக, நவம்பர் 14- ம் தேதி மாலை முதல் வடதமிழகத்தின் கடலோர பகுதிகள், ஆந்திராவின் தெற்கு கடலோர பகுதிகளில் மழை தொடங்கும். பின்னர் கனமழை பெய்யக்கூடும். வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அதிதீவிர கனமழையும், மற்ற பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும். இந்த புயல் தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.