டெல்டா மாவட்டங்களில், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சேதமடைந்த மரங்களுக்கு, அரசு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் வருமானத்தையும், வேலை வாய்ப்பையும் கொடுத்து வந்த, தென்னை மரங்களை இழந்துள்ள விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இனி புதிதாக, தென்னை கன்றுகளை நட்டு, அவற்றில் இளநீர் வருவதற்கு, மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். இந்நிலையில், 'வேருடன் வீழ்ந்து கிடக்கும், தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும்' என, தென்னை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, கோவை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த, தென்னை ஆராய்ச்சியாளர், பாலசுப்பிரமணியன் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களில், 5 சதவீதம் மட்டுமே, புயலில் சிக்காமல் எஞ்சியுள்ளன. அங்குள்ள விவசாயிகள், தென்னை மரங்களை முறையாக நடவில்லை. 1 அடி ஆழத்திற்கும் குறைவாகவே நடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில், குறுமண் கலந்த களிமண் தன்மை அதிகம். லேசாக தண்ணீர் பட்டாலே, அந்த மண் இளகிவிடும். மழைக் காலங்களில் ஏற்படும் மண் அரிப்பால், தென்னை மரங்கள், அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்துள்ளன. சில நாட்கள் தொடர்ச்சியாக, மழை பெய்த நிலையில், புயல் வீசியுள்ளது. இதுவே, தென்னை மரங்கள், அதிக சேதம் அடைவதற்கு காரணம்
தென்னங்கன்றுகளை, 3 அடி ஆழத்தில், முறையாக நட்டு இருந்தால், அதிகளவில் சேதம் அடைந்து இருக்காது. வேரோடு வீழ்ந்து கிடக்கும், தென்னை மரங்களை, மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். அந்த மரம், 15 வயதுக்குள் இருக்க வேண்டும். வீழ்ந்த மரங்களில், ஏதாவது ஒரு பகுதியில், வேர் எஞ்சி இருக்க வேண்டும். அந்த மரத்தை, குழி வெட்டி, மீண்டும் நட வேண்டும். நடப்படும் குழியில், 1 லிட்டர் தண்ணீரில், காப்பர் ஆக்ஸிகுளோரைடு, 5 கிராம் அளவு, கரைத்து ஊற்ற வேண்டும். நடப்பட்ட மரம், காற்றில் சாயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின், ஆறு மாதங்களில், மரத்தில் மீண்டும் வேர் பிடிக்கும். வழக்கம்போல் பூப்பெடுத்து, இளநீர் காய்க்கும். கட்டடங்கள் பாதிக்காமல் இருப்பதற்காக, 40 தென்னை மரங்களை, வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நட்டு, அதில் வெற்றி பெற்றுள்ளேன்.
யானைகளால் சேதம் அடைந்த, பல தென்னை மரங்களையும் காப்பாற்றியுள்ளேன். எனவே, வேருடன் வீழ்ந்த மரங்களை காப்பாற்றுவது, பெரிய சிரமம் அல்ல. இதுபற்றி, பட்டுக்கோட்டை அருகே உள்ள கண்ணுக்குடி கிராமத்தில், செய்முறை விளக்கம் அளித்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து வேளாண் துறை இயக்குனர் கூறியதாவது: வீழ்ந்த தென்னை மரங்களை, மீண்டும் நட முடியும் என்பது, அறிவியல் பூர்வமாக, இதுவரை நிரூபிக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா...என்பதும் தெரியவில்லை. அதேநேரத்தில், முடியாது என்றும் மறுப்பதற்கில்லை. ஒரு வேளை வாய்ப்பு இருந்தால், நிச்சயம் வேளாண் துறை வாயிலாக, அந்த மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.