தமிழகத்தின் மாநில மலராக உள்ள செங்காந்தள் மலா், தற்போது மத்திய அரசின் மருத்துவ பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இம்மலர் சங்க இலக்கியங்களான நற்றிணை, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை, பரிபாடல், மலைபடுகடாம், சிறுபாணாற்றுப்படை நூல்களில் காந்தள் மலா் என்னும் பெயரில் இடம் பெற்றுள்ளது. எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால் பழங்காலம் தொட்டே நமது பயன்பாட்டில் இருந்து வருகிறது. மத்திய அரசும் இதன் சிறப்பை அறிந்து இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
செங்காந்தள் செடியின் விதை, வோ் மற்றும் கிழங்கு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளதால் உலகமெங்கும் இதற்கான சந்தை வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் திருப்பூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கண்வலி கிழங்கு என்ற செங்காந்தள் மலர் பயிரிட்டு வருகின்றனர். 10,000 அதிகமான சிறு விவசாயிகள் செங்காந்தள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
வணிக ரீதியான வாய்ப்பு, விலை நிர்ணயம், அரசு நேரடியாக கொள்முதல் செய்தல், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுதல், மருத்துவ பொருட்கள் பட்டியலில் பதிவு பெறுதல் போன்ற பல்வேறு கோரிக்கையினை குளிர்கால கூட்ட தொடரில் வைத்தனர். இதை பரிசீலனை செய்த மத்திய அரசு, கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய ஆயுஷ்மிங்-ன் என்ற மத்திய அரசின் திட்டத்தின்கீழ் செங்காந்தள் மலர் மற்றும் அதன் விதைகள் மருத்துவ பொருட்கள் பட்டியல் சேர்க்கப்பட்டு, உற்பத்தி செலவில் பாதி மானியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி ஒரு ஹெக்டேருக்கு 2 லட்சத்து 40 ஆயிரத்து 667 ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டு அதில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.