திருவாரூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்துடன் 25 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு பயனாளிக்கும் ஒருநாள் வயதுடைய 1,000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். மேலும் 1,500 கிலோ தீவனம் மற்றும் இன்குபேட்டர் கொள்முதல் செய்ய 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
தகுதிகள்
பொருளாதார ரீதியாக ஏழ்மையில் உள்ளவர்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயனாளிகள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் 2,500 சதுர அடியில் 1,000 கோழிக்குஞ்சுகளை பராமரிக்கும் வகையில் கொட்டகை அமைக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறையின் வேறு எந்த கோழி வழங்கும் திட்டத்திலும் பயன் பெற்றிருக்கக் கூடாது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் நவ.23-ம் தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.....