கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பெரும்பாலான உணவு தானியங்கள் அறுவடை பணி முடிந்து முறையாக சேமிக்கவும் முடியாமல், விற்பனை செய்யவும் இயலாமல் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை எவ்வித கட்டணமின்றி ஒரு மாத காலம் வரை சேமித்து வைக்கலாம என அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டத்தை தொடர்ந்து தேசிய எல்லை முதல் கொண்டு நாட்டின் அனைத்து மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவிசிய மற்றும் அன்றாட பொருட்களின் சரக்கு போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி முடிந்து அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகள் நெல், நிலக்கடலை போன்ற பயிர்களை, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றனர். ஆனால் கரோனாவின் எதிரொலியால் விற்பனை கூடங்களுக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதால் தேக்க நிலை உருவாகி உள்ளது. எனவே விவசாயிகள் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்திக் தங்களின் விளைபொருட்களை சேமித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு உதவும் வகையில், எவ்வித கட்டணமின்றி தங்களின் விளைபொருட்களை ஒரு மாத காலம் வரை சேமிப்பு கிடங்குகளில் பாதுகாத்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாது விவசாயிகள் சேமிப்பு கிடங்குகளில் வைக்கும் விளைபொருட்களின், தற்போதைய சந்தை விலையில், 75 சதவீதம் வரை ( > 3 லட்சம் ரூபாய்) பொருளீட்டு கடன் பெற முடியும். அடமானத்தில் வைக்கும் விளைபொருட்களுக்கு 30 நாட்கள் வரை எவ்வித வட்டியும் செலுத்த தேவையில்லை என, தமிழக அரசு அறிவித்துள்ளது.