ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO- Food and Agriculture Organization) தகவல்களின் படி, டிசம்பரில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் சரிவைக் கண்டுள்ளது. முதன்மையாக சர்வதேச அளவில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
உலகளவில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளில் நிலவும் மாதாந்திர மாற்றங்களைக் கண்காணிக்கும் FAO-வின் உணவு விலைக் குறியீடு, டிசம்பரில் 127.0 புள்ளிகளாக இருந்தது. இது நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.5% சரிவு. அதே சமயம் கடந்த டிசம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது 6.7% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த குறியீட்டெண் என்ன?
புதிய ஆண்டிற்குள் நாம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக கடந்த 2024 ஆம் ஆண்டில், குறியீட்டெண் சராசரியாக 122.0 புள்ளிகளாக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.1% குறைவு. இந்த சரிவிற்கு முதன்மை காரணமாக கருதப்படுபவை தானியங்கள் மற்றும் சர்க்கரை விலையானது குறிப்பிடத்தக்க சரிவினை சந்தித்தது தான். இருப்பினும் காய்கறி சமையல் எண்ணெய், பால் மற்றும் இறைச்சி விலைகளின் அதிகரிப்பால் பெரியளவில் ஒட்டுமொத்தமாக சரிவு ஏற்படவில்லை என்பது தரவுகளின் அடிப்படையில் தெரிய வருகிறது.
தானியங்களின் விலை டிசம்பரில் நிலையானதாக இருந்தது, ஆனால் முந்தைய ஆண்டை விட 9.3% குறைவாக இருந்தது. 2024 ஆம் ஆண்டிற்கான FAO தானிய விலைக் குறியீடு சராசரியாக 113.5 புள்ளிகள், 2023- உடன் ஒப்பிடுகையில் 13.3% சரிவு. இன்னும் சொல்லப்போனால் 2022-உடன் ஒப்பிடுகையிலும் தானியங்களின் விலை சரிவினைத் தான் சந்தித்துள்ளது.
கணிசமாக அதிகரித்த அரிசி விலை:
அரிசி விலைகள் 16 ஆண்டுகளில் பெயரளவிலான உயர்வை எட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடும்போது 0.8% உயர்ந்துள்ளது. காய்கறி எண்ணெய் விலைகள் டிசம்பரில் 0.5% குறைந்துள்ளது, ஆனால் டிசம்பர் 2023 -உடன் ஒப்பிடுகையில் 33.5% அதிகமாகும்.
ஒட்டுமொத்தமாக காய்கறி எண்ணெய் சாரசரி விலைக் குறியீடு 2023 உடன் ஒப்பிடும்போது கடந்தாண்டு (2024) 9.4% உயர்ந்தது. இது உலகளாவில் எண்ணெய் தொடர்பாக நிலவிய பிரச்சினைகளை பிரதிபலிப்பதாக உள்ளது.
தொடர்ந்து ஏழு மாத வளர்ச்சியைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் பால் பொருட்களின் விலை 0.7% குறைந்துள்ளது. ஆயினும்கூட, 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டிற்கான பால் விலைக் குறியீடு 4.7% அதிகமாக இருந்தது.
சரிவிலிருந்து மீண்ட இறைச்சி விலை:
டிசம்பரில், இறைச்சி விலை 0.4% அதிகரித்து, மூன்று மாத சரிவிலிருந்து மீண்டது. 2024 ஆம் ஆண்டில், இறைச்சி விலைக் குறியீடு 2023 ஆம் ஆண்டை விட 2.7% அதிகமாக இருந்தது. பன்றி இறைச்சியின் விலை வீழ்ச்சியை ஈடுசெய்யும் வகையில் மாடு, முட்டை மற்றும் கோழி இறைச்சிகளுக்கான விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
டிசம்பரில் சர்க்கரை விலைகள் மிகக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை சந்தித்தன. சர்க்கரை உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளில் கரும்பு பயிர் சாகுபடியில் ஏற்பட்ட விளைவுகளின் காரணமாக 5.1% குறைந்துள்ளது. FAO உணவு விலைக் குறியீட்டில் டிசம்பரின் சரிவு உலகளாவிய சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களை எடுத்துக்காட்டுகிறது.
Read more:
வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்!