தமிழகத்தின் மாநில மலராக இருக்கும் செங்காந்தள் மலரானது, சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் மருத்துவ பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. சங்க கால இலக்கியங்களில் இடம் பெற்ற இம்மலருக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அரிய வகை செங்காந்தள் உலகிலேயே தமிழகத்தில் தான், 90 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
செங்காந்தள் விதை மருத்துவ குணம் கொண்டிருப்பதால், அதனை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்ய எக்ஸ்ட்ராக்ட் நிறுவனம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டில், மலரின் உற்பத்தி சரிவடைந்ததை தொடர்ந்து விதைகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி இடைத்தரகர்கள், குறைந்த விலைக்கு வாங்க முற்படுவார்கள் என்பதால் விவசாயிகள் நிர்ணயக்கப் பட்ட விலைக்கு விற்கலாம் அல்லது ஓரிரு மாதங்கள் இருப்பு வைத்து பின் விற்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு செங்காந்தள் விதை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் லிங்கசாமி வெளியிட்ட அறிக்கையில், செங்காந்தள் விதை (கண் வலி விதை) விவசாயிகளின் நிதி நெருக்கடியை பயன்படுத்தி ஒரு சில இடைத்தரகர்கள் மிகக் குறைந்த விலைக்கு, விதைகளைக் கொள்முதல் செய்கின்றனர். சென்ற ஆண்டு ஒரு கிலோ, ரூ.3,800 என விற்பனையானது.அதன் பின்னர் கிலோ ரூ.1,300க்கும் குறைவாக விற்பனை செய்து விவசாயிகள் நட்டமடைந்தனர். இதை தவிர்க்க இம்முறை மேக் நிறுவனத் தலைவர் மனுநீதி மாணிக்கம் மூலம் கிலோ, ரூ.2,000க்கு உறுதியளிக்கப்பட்டு விதை கொள்முதல் செய்யப்பட்டது.
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றதை அடுத்து, நிகழாண்டில் விதையை இருப்பு வைத்து விற்பனை செய்தால் ரூ.3,000க்கு மேல் விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. நிதி நெருக்கடியில் உள்ள விவசாயிகள் மனுநீதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம், ஸ்டேட் வங்கியில், இருந்து ரூ.22 கோடியை, மாதம் 0.33 சதவீத வட்டிக்கு பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இடை தரகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யாமல் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்து பயனடையுமாறு தெரிவித்தார்.