பிரதமரின் தாயார் எடைக்கு நிகரான 60 கிலோ தங்கத்தை வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளது மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, உடல் எடைக்கு நிகராக சர்க்கரை, வாழைப்பழம், வெல்லம் எனப் பலவகைப் பொருட்களைத் தந்து துலாபாரம் எடுப்பதாக, கடவுளுக்கு நேர்த்திக்கடன் செய்து கொள்வது வழக்கம். அந்தவகையில், தற்போது ஒருகோயிலுருக்கு, மூதாட்டியின் எடைக்கு எடைத் தங்கத்தை தானமாக வழங்கி நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்திருக்கிறார் தொழில் அதிபர் ஒருவர்.
என்ன ஆச்சர்யம் என்னவென்றால், அவர் தனக்கே, தன் தாயாருக்கோ இந்த நேர்த்திக்கடனைச் செலுத்தவில்லை. பிரதமர் மோடியின் தாயாருக்காகத் தங்கத்தைத் தானம் செய்திருப்பதுதான்.
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு பிரதமர் மோடியின் தாயாரின் எடைக்கு நிகரான தங்கத்தை தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக அளித்துள்ளார்.
நன்கொடை அளித்தவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. மாறாக, தான் தீவிர மோடியின் ரசிகர் எனவும், பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபெனின் எடைக்கு நிகரான 60 கிலோ தங்கத்தை அளிப்பதாக நன்கொடையாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை வாரணாசி கோட்ட ஆணையர் தீபக் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், பெயர் குறிப்பிட விரும்பாதவரிடம் இருந்து பெறப்பட்ட 60 கிலோ தங்கத்தில், 37 கிலோ கருவறையின் உள் சுவர்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 23 கிலோ பிரதான கட்டமைப்பின் தங்கக் குவிமாடத்தின் கீழ்ப் பகுதியை அலங்கரிக்க பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்.,27ல் பிரதமர் மோடி வாரணாசி வந்தபோது, கோவிலின் உள் சுவர்களில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...