மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகனின் கோரிக்கைக்கு இணங்க, மேட்டுப்பாளையம் – கோவை ரயில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இரயில் பயணம் (Train Travel)
மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், ரயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், தமது தமிழ்நாட்டுப் பயணத்தின் போது ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், மேட்டுப்பாளையம் – கோவை ரயிலை ஞாயிற்றுக் கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஞாயிற்றுக் கிழமைகளில் ரயிலை இயக்கினால், அந்த மார்க்கத்தில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்றும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதில் அளித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டாக்டர் எல்.முருகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த மேட்டுப்பாளையம் – கோவை ரயில் இனி தினசரி இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் அந்தக் கடிதத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் இந்த அறிவிப்பு எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாரம் 7 நாட்களும் மேட்டுப்பாளையம் - கோவை இடையே ரயில் இயக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி எனவும், பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த ஒப்புதலை வழங்கியற்கு மிக மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோவை ரயில் நிலையத்தை சர்வதேச தரத்துக்கு தரம் உயர்த்துவதற்கு ரயில்வே அமைச்சர் உறுதியளித்திருந்தார். மத்திய அரசின் ரூ.300 கோடி நிதியுதவித் திட்டத்தின் கீழ் கோவை ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றப்படும் என்று அவர் கூறியிருந்தார். இதுபோன்ற சூழலில் தற்போது கோவை ரயில் பயணிகளுக்கு மேலுமொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ரயில் பயணங்களில் இதுபோன்ற வசதிகள் வந்தால் ரயில் பயணிகளுக்கு சிரமம் இருக்காது; சௌகரியமாகவும் பயணிப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
இனி ஞாயிற்றுக் கிழமையிலும் இந்த வங்கி இயங்கும்: விடுமுறையில் மாற்றம்!