தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. அதில் ஒன்று கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கும் முறை. அதாவது அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். அதற்கு அதிகமாக படித்திருந்தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இளங்கலை, முதுகலை, கல்வியியல் என ஒவ்வொரு படிப்பிற்கு ஏற்ப ஊக்க ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.
ஊக்கத்தொகை (Incentive)
ஆசிரியர்களின் கல்வித் தகுதியை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும். இதற்கு சில அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன. அரசு ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின்னர் உயர்கல்வி படிக்க வேண்டும் என்றால், தாங்கள் பணியாற்றும் துறை அதிகாரிகளின் முன் அனுமதி பெற வேண்டும். அப்படி செய்து படிப்பை முடித்தால் மட்டுமே ஊக்க ஊதியம் வழங்க பரிந்துரை செய்யப்படும்.
ஒரு வேளை முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டு ஊக்க ஊதியம் கேட்டால் அனுமதி அளிக்கப்படாது. இதுதொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி உத்தரவு ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்தது. இது தற்போது வரை அமலில் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அரசின் உத்தரவை பின்பற்றி முன் அனுமதி பெற்று படித்து முடித்தவர்களுக்கு ஊக்க ஊதிய பரிந்துரையை மாவட்ட கல்வி அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர்.
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் முறைப்படி ஊக்க ஊதியம் பெற தகுதியான நபர்களின் அனைத்து விவரங்களையும் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலின் அடிப்படையில் ஊக்க ஊதியம் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அரசு தொடக்கப் பள்ளிகளை பொறுத்தவரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி அதன்மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க
பழைய பென்சன் திட்டத்தில் இருக்கும் ஆபத்து: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!