News

Tuesday, 02 June 2020 04:57 PM , by: Daisy Rose Mary

தமிழ்நாடு வேளாண் விலை பொருட்கள் விற்பனை சட்டத்தில் (1987-ல்) திருத்தம் செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதன்படி எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்நாட்டில் விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைபொருட்களை எவ்வித சிரமமுமின்றி லாபகரமான விலைக்கு விற்பனை செய்து பயனடைய ஏதுவாக மின்னணு சந்தை முறைக்கு அனுமதியளித்தமை, வணிகர்களின் சிரமத்தினைப் போக்க மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கியமை மற்றும் ஒருமுனை விற்பனைக் கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட வேளாண்மை விற்பனை சார்ந்த முன்னோடி சீர்திருத்தங்களை தமிழ்நாடு முதல்வரின்பேரில் பிப்ரவரி 2017 முதல் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் நன்மையைக் கருத்திற்கொண்டு, தற்போது தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-ல் கூடுதல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, ஓர் அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழ்நாடு அரசு கருதியது. இந்த அவசர சட்டத்தின் படி,

  • வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தமிழகத்தில் உள்ள எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் விற்பனை செய்யலாம்.

  • அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும், அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்யலாம்.

  • விவசாயிகள் விளைபொருட்களை தங்கள் பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கும்.

மேற்கண்ட பன்முகத்தன்மையிலான விற்பனை முறைகளில் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு விற்பனை முறையினையும் தேர்வு செய்து, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்யவும், அதன் மூலமாக தங்கள் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையினைப் பெற்று பயனடையவும் இந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு சூழ்நிலையிலும் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும் பொழுது அவர்களிடமிருந்து விற்பனைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்றும் இந்த அவசரச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே, முதல்வரின் பரிந்துரையின் பேரில், ஆளுநர் பின்வரும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அவசரச் சட்டத்தினைப் பிறப்பித்துள்ளார்:

  • தமிழ்நாடு வேளாண்மை விளைபொருட்கள் விற்பனைச் (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987-ல் சீர்திருத்தங்களை கொண்டு வருதல்

  • விற்பனைக் குழுக்களின் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தினை 29.05.2020-க்கு பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்தல்"

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)