தமிழகத்தில் பாதாள சாக்கடைகள், கழிவுநீர் கிணறு பராமரிப்பின்போது துாய்மை பணியாளர்கள் தொடர்ந்து பலியாகி வரும் நிலையில் அதுகுறித்து தமிழக அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மதுரையில் 2016ல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய ஒருவர், 2018ல் இரண்டு பேர் என விஷவாயு தாக்கி பலியாகினர். நேற்று முன் தினம் இரவு பழங்கா நத்தம் நேரு நகர் கந்தசாமி தெரு மாநகராட்சி உபகழிவு நீரேற்று நிலைய 30 அடி ஆழ கழிவுநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய மாடக்குளம் சிவக்குமார் 45, தவறி விழுந்தார். அவரை மீட்க மாடக்குளம் சரவணன் 32, அலங்காநல்லுார் லட்சுமணன் 31, இறங்கியதில் மூவரும் விஷவாயு தாக்கி பலியாகினர்.
நிதியுதவி (Funding)
மதுரை கழிவு நீரேற்று பணிகளை மேற்கொள்ளும் சென்னை வி.ஜி.ஆர்., ஒப்பந்த நிறுவன உரிமையாளர் விஜய்ஆனந்த் தலைமறைவானார். பணியாளர்கள் ரமேஷ், லோகநாதனை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர். அரசு மருத்துவமனையில் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்த நிறுவனம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார்.
மனித கழிவு தடுப்பு சட்டம் 2013 (Human Waste Prevention Act 2013)
மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடுக்க 2013ல் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என மத்திய, மாநில அரசுகள் கண்காணிப்பதில்லை. இன்னும் உபகரணங்களின்றி தான் பணியாளர்கள் சுத்தம் செய்கிறார்கள். குறிப்பாக மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முககவசம், கையுறை, காலுறை, கவச உடை, உபகரணங்கள் இல்லாத நிராயுதபாணியாக தான் உயிரை பணயம் வைத்து பணி செய்கிறார்கள்.
ஒப்பந்ததாரர்களால் தொல்லை (Harassment by contractors)
ஒப்பந்த நிறுவனங்களில் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை ஒப்பந்ததாரர்கள் தருவதில்லை. கட்சி பின்புலம் கொண்ட பெரும்புள்ளிகள் தான் அதிகளவு ஒப்பந்தம் எடுத்துள்ளனர். இவர்களிடம் சம்பள குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பணியாளர்கள் கேட்டால் மிரட்டப்படுகிறார்கள். பல வகையில் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
ஒப்பந்த நிறுவன செயல்பாடு குறித்து மாநகராட்சி நிர்வாகம், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. கண்டு கொள்ளாமல் இருக்க 'லஞ்சம்' கொடுத்து சரி கட்டப்படுகிறது. இனியாவது தமிழக அரசு துாய்மை பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மதுரை சம்பவமே இறுதியாக இருக்கட்டும்.
மேலும் படிக்க
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகள்: 4-வது இடத்தில் இந்தியா!
உள்நாட்டு பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்: பிரதமர் மோடி!