தேங்காய் விலை சரிவை தடுக்க, அரசு சார்பில், தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு சார்பில், அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி - பல்லடம் ரோடு தனியார் திருமண மண்டபம் அருகே நடந்தது. நட்பமைப்பு தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
தேங்காய் விலை சரிவு (Coconut Price Falls Down)
எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், அமுல் கந்தசாமி, கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., கஸ்துாரி, கொ.ம.தே.க., மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் மற்றும் பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை, 150 ரூபாய்க்கு உயர்த்த வேண்டும். அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்பெறும் வகையில், தமிழக அரசு தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கவும், சத்துணவு சமையலுக்கு ஊட்டச்சத்துகள் நிறைந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொப்பரை கொள்முதல் (Coconut Purchase)
தேங்காய் கொப்பரை கொள்முதல் இலக்கில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 25 சதவீதமும், தமிழகத்தில் 15 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்துள்ளனர். வரும் 31க்குள் இலக்கை அடைய வேண்டிய சூழலில், பருவமழையும் துவங்கியுள்ளதால், கொப்பரை கொள்முதலை விரைவுப்படுத்த வேண்டும். தென்னையில், கேரளா வாடல் நோய், பென்சில் கூம்பு, வெள்ளை ஈ போன்ற பல்வேறு பாதிப்புள்ளது. இதனால், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்களை கண்டறிய ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி, விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கொப்பரைக்கு, 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; தென்னை நார் ஏற்றுமதிக்கு கன்டெய்னர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, வலியுறுத்த உள்ளோம் என்று அவர் தெரிவித்தார். கள் இறக்க, விற்க அனுமதிக்க வேண்டும். பாமாயிலுக்கு, 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்!