விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை (04.11.2024) வேளாண்மைத்துறை மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் இணைந்து மேற்கொண்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டு (2024-2025) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். தேர்வு செய்யப்பட்டுள்ளது. சம்பா- நெல் மற்றும் ராபி இதர பயிர்களுக்கு காப்பீடு செய்வது குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மாவட்ட அளவில் நடைபெற உள்ளது.
காப்பீடு செய்வது எங்கே?
ராபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்துள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC) மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டின் நடப்பு ராபி பருவத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாளான 15.11.2024-க்குள்ளும், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாளான 30.11.2024-க்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும்.
காப்பீடு கட்டணம் எவ்வளவு?
வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.228/- எனவும், சம்பா-நெல் பயிருக்கு ரூ.447/- எனவும், மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 316/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 135/- எனவும், கம்பு பயிருக்கு ரூ. 160/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இணையதள இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளவேண்டும்.
அவ்வாறு விவசாயிகள் தாங்கள் பயிர் காப்பீடு செய்ததற்கான இணையதள ரசீதினைப் பெறும்பொழுது தாங்கள் பயிரிட்டுள்ள பயிரின் பெயர், பயிர் செய்துள்ள கிராமம் மற்றும் தங்களது வங்கிக் கணக்கு பற்றிய விபரங்கள் ஆகியவை சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ளவேண்டும்.
எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,விவசாயிகளுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
Read more:
அதிக மகசூல் தரும் டி.எம்.வி.14 (TMV 14) நிலக்கடலை இரகம்- கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
NAMO DRONE DIDI: வேளாண் பணிகளில் பெண்கள்- ரூ.8 லட்சம் வரை நிதியுதவி!