விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசால் 10,000 உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPO) அமைக்கப்படும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய பயிர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவுப்பெற்றது.
தொடக்க விழாவில் தமிழ்நாடு வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பங்கேற்று கருத்தரங்கு நிகழ்வில் அமைக்கப்பட்ட சிறுதானிய கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்ட நிலையில் இறுதி நாளான நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சிறுதானிய உணவுக் கண்காட்சி 2023-ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிறுதானியம் சார்ந்த தயாரிப்புகள் இடம்பெற்ற அரங்குகளை பார்வையிட்டு, தொழில் முனைவோர், விவசாய உற்பத்தி அமைப்புகளின் புதுமையான முயற்சிகளையும் ஆளுநர் பாராட்டினார். மேலும் ஆளுநர் முன்னிலையில் 10 உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனிகளுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் தெரிவிக்கையில், பிரதமரின் 7 அம்ச உத்திகள் மற்றும் விவசாயம் 4.0 கொள்கையினை பின்பற்றி விவசாயப் பொருளாதாரத்தையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றார்.
நாட்டில் விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசால் 10,000 உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPOs) அமைக்கப்படும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான சந்தை வழி மற்றும் விவசாய அணுகுமுறையை செயல்படுத்துவதற்கான ஒரே தளம் FPO-க்கள் மட்டுமே என்றார்.
ஆங்கிலேயர்களின் படையெடுப்பிற்கு முன் இந்தியாவில் உணவு பஞ்சம் இல்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் நமது விவசாய முறையை அழித்தனர். உணவு பஞ்சத்திலிருந்த நாம் விவசாய புரட்சியின் மூலம் மீண்டோம். இன்று போதுமான அளவைவிட அதிகளவிலான உணவு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறோம். இந்த சாதனை நிகழ்ந்ததுக்கு காரணம் விவசாயிகளும், வேளாண் விஞ்ஞானிகளும் தான்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இருந்தது. அங்கு தற்போது சிறுதானியம் மீது கவனம் செலுத்தி இயற்கை விவசாயத்தினை பலர் மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் பிரச்சினை உள்ள பகுதிகளில் சிறுதானிய விவசாயம் மேற்கொள்ளுவது நல்ல பலன்களை தரும் எனவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். உடல்நலனுக்கு நன்மை பயக்கும் சிறுதானியகள் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டார்.
புதுதில்லியிலுள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண்மை உயர்கல்வி திட்டத்தின் கீழ் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிறுவன மேம்பாட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி ரூ.24.85 கோடி நிதி அளித்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
pic courtesy: Rajbhavan TN
மேலும் காண்க:
நடப்பாண்டு 1,72,270 ஹெக்டர் சாகுபடி செய்ய இலக்கு- உரம் இருப்பு குறித்து ஆட்சியர் தகவல்