ISF சார்பில் உலக விதை மாநாடு 2024, கோலாகலமாக தொடங்கிய நிலையில் இந்த மாநாடு வருகிற மே-29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டின் முதல் நாளான இன்று, எவ்விதமான நிகழ்வுகள் நடைப்பெறுகிறது என்பது குறித்து இப்பகுதியில் அறியலாம்.
சர்வதேச விதை கூட்டமைப்பானது (ISF- International Seed Federation) தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் வேளாண் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையேயான வலையமைப்பு உறுதி செய்யும் தளமாக செயல்படுகிறது. இந்த அமைப்பானது, வேளாண் தொடர்பான வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதற்கு உதவுகிறது.
நெதர்லாந்தில் உலக விதை மாநாடு:
சர்வதேச விதை கூட்டமைப்பின் முதன்மை நிகழ்வான, ISF World Seed Congress 2024-யினை ISF மற்றும் டச்சு நேஷனல் ஆர்கனைசிங் கமிட்டி (Dutch National Organizing Committee- Plantum) இணைந்து நடத்துகிறது. அந்த வகையில், இன்று மே 27 முதல் வருகிற மே 29 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த முக்கியமான நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக ISF-யின் 100 வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வில் கிரிஷி ஜாக்ரனின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான எம்.சி.டொம்னிக் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பாளர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்வதுடன் மாநாட்டின் நாள் தொடங்கியது. சர்வதேச விதை சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் மைக்கேல் கெல்லர், ISF -ன் 100 வது ஆண்டு விழா குறித்து பேசுகையில், "1924 ஆம் ஆண்டில், பரஸ்பர புரிதல், வணிக நடைமுறைகள் மற்றும் விதை தரங்களை நிறுவுவதற்காக ஆறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 விதை வியாபாரிகள் கேம்பிரிட்ஜில் ஒன்று கூடினர்" என ISF தொடக்கக் காலம் குறித்து நினைவு கூர்ந்தார்.
மேலும் கெல்லர் பேசுகையில், உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் விதைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். “நம்முடைய உணவில் 80 சதவிகிதம் தாவர அடிப்படையிலானது, பெரும்பாலானவை விதைகளிலிருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில், விதை வர்த்தகம் கணிசமாக வளர்ந்துள்ளது. விதை இயக்கமானது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியுடன் இணைக்கப்பட வேண்டும்.”
”நிறுவனங்கள் விதைகளின் மரபணுத் திறனைத் தொடர்ந்து கண்டறிந்து வருகின்றனர், இதன் விளைவாக 1924-ஐ விட 50 மடங்கு அதிகமாக அறுவடை காண முடிகிறது. இந்த முன்னேற்றத்திற்கு ஆண்டு வருவாயில் 30 சதவிகிதம் வரை முதலீடு தேவைப்படுகிறது” எனவும் தெரிவித்தார்.
தேசிய ஏற்பாட்டுக் குழு (NOC)- Plantum தலைவர் ஜாப் மசெரியூவ் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். “இந்த நூற்றாண்டு ISF காங்கிரஸ் உலகளாவிய விவசாயம் மற்றும் விதைத் துறையின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். இது நமது கடந்த காலத்தை நினைவுகூருவது மட்டுமல்ல, உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் விதைத் தொழிலின் முக்கிய பங்கைக் காட்டுகிறது” எனவும் குறிப்பிட்டார்.
FAO துணை இயக்குநர் ஜெனரல் பெத் பெக்டோல், காலநிலை நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சிகள், போர் போன்ற மோதல்கள் மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய மக்கள் தொகை உள்ளிட்ட அழுத்தமான சவால்களை எடுத்துரைத்து பேசினார். 2050 ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதம் கூடுதலான உணவை உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டும் கணிப்புகளுடன், அதில் 80 சதவிகிதம் தாவரங்களிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
ISF World Seed Congress 2024 Gallery
இதனடிப்படையில், ”விதை பாதுகாப்பிற்கான முக்கியமான தேவை அதிகரித்துள்ளது. வெள்ளம், சூறாவளி, வறட்சி மற்றும் நிலச்சரிவு போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் விவசாய உற்பத்தி மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பராமரிக்க வேண்டியதன்” அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
Read more:
Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
பூசா பாஸ்மதி 1979- பூசா பாஸ்மதி 1985 அரிசி வகைகளின் விதை விற்பனை தொடக்கம்!